பக்கம்:கனிச்சாறு 3.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


நெஞ்சை நிமிர்த்துக தம்பி! - உன்
நேரிய பார்வையைக் கூராக்குத் தம்பி!
பஞ்சைய ரல்லரே நாமும் - சேர
பாண்டிய சோழர்தம் வழியினர் அன்றோ!
மிஞ்சும் துயர்வெள்ளம் மேலே - இனி
மேலும் பொறுத்திடல் கோழையர் வேலை!
அஞ்சிடும் சாவுகள் கோடி - எனில்
அஞ்சாமை பெற்ற உரிமைகள் கோடி!

-1981



81  தமிழீழ மறவரைத் தமிழால் வணங்குவேன்!

மாந்த உரிமைகள் மறுக்கப் படுவதைக்
காந்தும் உளத்தொடு கருத்தினும் செயலினும்
இந்நில வுருண்டைமேல் எவரெழுந் தெதிர்த்துச்
செந்நிறக் குருதியைச் சிந்துகின் றாரோ,
விண்ணசை வுறஎவர் வெற்றி விடுதலைப்
பண்ணிசை முழக்கிப் பாடுகின் றாரோ,
அவரை வாழ்த்தும்இவ் வார்வ நெஞ்சம்,
தவறிலா விடுதலைப் புலிகளைத் - தமிழீழ
உரிமை வேள்விக்கு உயிர்தரும் இளைஞரை
வரிநிறம் மாறா வேங்கை வயவரை
குறிதிசை திறம்பாக் கொள்கை மறவரை,
உரம்நெகி ழாத உரிமை உளங்களை,
விலையில் லாதஅவ் வீர உயிர்களைத்
தலைதரை தாழ்த்துத் தமிழால் வணங்குமே!

-1982
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/117&oldid=1424609" இலிருந்து மீள்விக்கப்பட்டது