பக்கம்:கனிச்சாறு 3.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  89


82  தூக்கில் இடவேண்டா!

தூக்கில் இடவேண்டா! - இளங்
குட்டி மணியையும்,செகனையும் - சிங்களர்
தூக்கில் இடவேண்டா!

தேக்கிய வீரத்தின் தொகுப்பன்றோ, அன்னவர்!
தமிழீழ நலத்துக்குத் தம்நலம் தின்னவர்!
பாக்கொள்ளும் துணிவொடு சாவையும் கொன்றவர் !
பாருக்குள் விடுதலை வரலாற்றின் குன்றவர்!

(தூக்கில்)


சிங்கள நாட்டுக்கும் பெருமை, அவர் பிறப்பு!
செந்தமிழ் இனத்துக்கே இழப்பு, அவர் இறப்பு!
எங்குமே உலகினில் வீரமிலா மற்போகும்;
இவர்களைத் தூக்கிலிட்டால், வீரத்தின் உயிர்சாகும்!

(தூக்கில்)


கொலை செய்ய வில்லையா, மறவர்கள் போரினில்?
குடிநலம் காத்திடக் களைகொய்தார் வேரினில்!
விலையதற் கீவது தமிழீழம் ஒன்றுதான்!
வீணர்கள் இருந்தென்ன? மறம் வாழ்தல் நன்றுதான்!

(தூக்கில்)


வீரங்கள் கொழிக்கின்ற விளைநிலத் தோப்பு, அவர்
வேண்டுதல் வேண்டாத தன்மைக்குக் காப்பு, அவர்!
ஈரங்கொள் மனத்தினால் எண்ணியே பாருங்கள்!
இளைஞரை அழிக்காமல் வாழ்க்கையைத் தாருங்கள்!

(தூக்கில்)
-1982
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/118&oldid=1424610" இலிருந்து மீள்விக்கப்பட்டது