பக்கம்:கனிச்சாறு 3.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி

ஆனாலும் வீரர்களே!
ஆர்த்தெழுந்த நெஞ்சங்களே!
போனாலும் ஒருமுறைதான்
போன உயிர் மீளாது,
மானத் தமிழீழம்!
மற்றெதற்கு வாழ்வுநலம்?
கூனாத் தமிழ்வீரம்!
கொப்பளிக்கும் செம்மாப்பு!

என்றபடி போரிட்டீர்!
எதிர்பார்த்துக் காத்திருந்தீர்!
தின்றுழலும் வாழ்க்கையிலே
தீனிப்பை நிறைந்துவிட்டால்
குன்றெதிரே பகையாகிக்
குலைநடுங்க வந்தாலும்
நின்றெதிர்க்க மாட்டாத
நெடுமரமாய் இருந்துவிட்டோம்!

சாதிக்குப் போரிடுவோம்!
சழக்குமதக் கூறிடுவோம்!
வீதிக்கு வீதி
விரிசலுற்றுப் போய்விட்டோம்!
பாதிக்குக் குறைந்துவிட்டோம்!
பண்பாடு கலையிழந்தோம்!
ஏதினிமேல் முன்னேற்றம்?
எதற்கினிமேல் வாழ்ந்திருப்போம்?

தமிழீழம் கேட்கின்ற
தங்க மறவரை நாம்
அமிழாத வீரப்போர்
ஆங்கதனில் பறிகொடுத்தோம்!
உமிழ்கின்ற புன்பகையின்
உயிர்குடிக்கத் தவறிவிட்டோம்!
தமிழீழ மறவர்களே!
தாழ்ச்சியில்லா வீரர்களே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/123&oldid=1424615" இலிருந்து மீள்விக்கப்பட்டது