பக்கம்:கனிச்சாறு 3.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  97

இந்தக் குழந்தைகள்
பிறக்கையில் பெற்றோர்
எது நினைத் தாரோ தெரியவில்லை!
இந்தக் குழந்தைகள் துமுக்கிக்கே
இரையா கும்என அறியவில்லை!

பயிர்களை அழித்திடும்
பூச்சிகள் கொன்றிடப்
பற்பல மருந்துகள் கண்டறிவோம்!
உயிர்களை அழிக்கும்
சிங்களக் கொடியரை
ஒழித்திடும் மருந்தெது?
விண்டறிவோம்!

-1986


88  அழுகிறாய் கண்ணே! அழாதே !


அமிழ்த வாய் திறந்தே
அம்மா அம் மாவென்(று)
அழுகிறாய், கண்ணே!-அழாதே!
தமிழீழம் பெற வுன்
தாயும் தந்தையும்
தம்முயிர் தந்தனர்-அழாதே!

சிங்களக் கொடியர்
சிதைத்த தமிழருள்
சிக்கினர் அவர்களும்!- அழாதே!
இங்குனக் காயிரம்
பெற்றோர் இருக்கையில்
ஏனழு கின்றாய்?-அழாதே!

நம்மவ ருக்கொரு
நாடு கிடைத்திடும்!
நலம் வரும் உனக்கும்!- அழாதே!
அம்மா, அப்பா,
அண்ணன், அக்கையாய்
அனைவரும் இருப்போம்!- அழாதே!

-1986
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/126&oldid=1424618" இலிருந்து மீள்விக்கப்பட்டது