பக்கம்:கனிச்சாறு 3.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


89  தமிழீழப் பெண்கள் எழுச்சிப் பண்!


நீண்ட காலம் பூண்ட அடிமையும்,
நெடிய காலம் இழந்த உரிமையும்,
மாண்டு மடிந்த இருளொடு மாய்ந்தன!
மங்கையரே! ஒன்று திரண்டெழு வீரே!
மலர்ந்தது மலர்ந்தது தமிழீழம் என்றே!

எதிரிகள் படைகளும் தூள்தூள் ஆயின;
எம்முடை அண்ணனும் தம்பியும் சாய்ந்தனர்!
கதிரவன் முளைத்தது சிவந்த வானிலே;
கன்னியரே! ஒன்று சேர்ந்தெழு வீரே!
காத்த வீரரைக் கைதொழு வீரே!

ஆண்டான் அடிமை வேற்றுமை ஒழிந்தது;
ஆண்பெண் சமமென முரசும் ஒலித்தது;
வேண்டிய விடுதலைப் பண்ணும் இசைத்தது;
வீரப் பெண்டிரே இணைந்தெழு வீரே!
விடிவை நோக்கிப் புறப்படு வீரே!

சிவப்பு நிலத்தினில் பசுமை செழித்தது!
சிந்திய குருதியால் உரிமை கொழித்தது!
தவப்பு தல்வரின் உயிர்களும் சிரித்தன!
தங்கை தமக்கையர்கள் கற்பும் எரிந்தது!
தாய்க்குலத் தீர்!வந்து கூடிடு வீரே!

இழந்த உரிமைகள் மீண்டன இங்கே!
எல்லா நலன்களும் பெற,ஊது சங்கே!
பழந்தமிழ் ஈழம் சமைத்திடு வோமே!
பாரினுள் நாமும் உயர்ந்திடு வோமே!
பாங்கிய ரே!அணி திரண்டெழு வீரே!

-1987
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/127&oldid=1424619" இலிருந்து மீள்விக்கப்பட்டது