பக்கம்:கனிச்சாறு 3.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


91  தரை பிளந்து விழுங்குவாயே!

மழைவெள்ளம் மிகுந்(து) ஊரை அழிக்கையிலே
மகிழ்ச்சியுடன் பாட்டியற்றிப் பாடுவோமா?
கழைமிகுந்த காட்டுத்தீ நகர்பற்றிக்
கருக்கையிலே இலக்கியங்கள் கதைக்குவோமா?
குழைவுற்ற சேற்றுக்குள் புதைபடுங்கால்
கூட்டங்கள் விழாக்களென எண்ணுவோமா?
தழைவின்றித் தமிழினந்தான் இலங்கையிலே
தான்மடிய, இவையிங்கே தேவைதாமோ?

சூல்கொண்ட பெண்ணொருத்தி கருக்கலைந்து
துடிக்கையிலே கணவன்யாழ் மிழற்றுவானோ?
கால்கொண்ட சூறைவளி சுழற்றுகையில்
கவின் கூரை குடிலுக்கு வேய்குவோமா?
தோல்வழன்று கழலுகையில் பொன்னணிகள்
துவளும்வகை மனைவிக்குப் பூட்டுவோமா?
மால்கொண்ட தமிழினந்தான் இலங்கையிலே
மாள, இங்கே கலை, காட்சி தேவைதாமோ?

அமைச்சரெலாம் தமிழகத்தில் நாளெல்லாம்
பொழுதெல்லாம் அரசுவிழாக் குளிக்கின்றார்கள் !
நமைச்சலுறும் உள்ளத்தால் வேடிக்கை
விளம்பரங்கள் விளையாடிக் களிக்கின்றார்கள்!
குமைச்சலுறக் கத்துகின்றார் கமறுகின்றார்,
கணமெல்லாம் இலங்கையிலே தமிழமக்கள்!
எமைச்சுமக்கும் தமிழ்நிலமே! இவைபொறுக்க
இயல்கிலையே! தரைபிளந்து விழுங்குவாயே!

-1987
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/129&oldid=1424621" இலிருந்து மீள்விக்கப்பட்டது