பக்கம்:கனிச்சாறு 3.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


ஓநாயும் நரியும் கூடி
ஒப்பந்தம் பேசித் தீர்க்க,
ஓங்கிய கோபு ரம்போல்
ஒடிந்தன கனவெல் லாமும்!
பீ நாசி மணந்த துண்டோ?
பேய்ச்செய வர்த்த னாவும்
பிழையான இராசீ வும்'- தாம்
பேசிய தாரே கண்டார்?
பூநாறும் கூடைக் குள்ளே
புலவுநா றியதைப் போலப்
புலிவீரம் மாறிப் போன
புதுக்கதை கேட்டோம், அம்மா!
பாநூறு பாடி வெற்றி
பராவிடக் காத்த உள்ளம்
பதைத்தது; கொதித்த தந்தோ!
பழுத்ததோ அடிமைக் காய்தான்!

நெடுமரம் ஒன்றில் ஏறி
நெட்டுக்கே வீழ்ந்த தைப்போல்
நெடுங்கடல் ' பயணம் ' செய்தே
நீருக்குள் மூழ்கி னாற்போல்
கொடுவாளின் பிடிசெய் யப்போய்க்
குத்திட்டு மாண்ட தைப்போல்
குரல்எழ மருந்து தின்று,
குடல்வெந்து செத்த தைப்போல்
விடுதலை வேண்டிச் செய்த
வீரப்போர் முடிவில் மக்கள்
விடிவில்லா அடிமைப் பட்டு
வீழ்ந்ததை என்ன சொல்வோம்!
கெடுதலை ஊழ்தான் செய்த
கெடும்பென்றே எண்ண லாமா?
கீழ்க்குணம் அழியா மக்கள்
என்றுமே அடிமை தானா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/133&oldid=1424625" இலிருந்து மீள்விக்கப்பட்டது