பக்கம்:கனிச்சாறு 3.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


நீட்டிய வேட்டெஃகத் தோடு,
அலையோ அலையென்று
அலைகின்றார்களாமே, இந்திய
வேட்டை நாய்கள்!
நீ எங்கே உழல்கிறாய்? சொல்!
எந்தக் காடு மேடுகளில்
அல்லாடுகின்றாய்? சொல்!

வெட்சிக் கானத்து
வேட்டுவர் ஆட்டும்
கட்சி காணாத
கடமா நல்லேறே!
புறநானூற்றுச் செல்வமே!
தமிழர் வீரப் புதையலே!
கடந்த ஐந்தாண்டுக் காலமாய்
நூறாயிரம் இந்தியக் கழுதைகள்
மேய்ந்து தின்றும்
நுனிமழுங்கவில்லை, - எம்
தமிழரின் வீரம் - என்று,
பனி உலகுக்குப் பறைசாற்றும்
பழம் பாண்டியத் திருமறமே!

சுழலும் இசை வேண்டி
உயிர் வேண்டா வீரனே!
உயிர் அஞ்சா மறவனே!
உலகில் வேறெந்த வீரனுக்கும்
இல்லாத ஓங்கிய பெருமை
உனக்குண்டு; உன் வீரருக் குண்டு!
உலகின் மூன்றாம் வலிமை வாய்ந்த
இந்தியப் படைக்கே சூளுரைத்தாய், நீ!
முயல் வேட்டை யன்று,நீ
விளையாடுவது!
யானை வேட்டை! ஆம்!
காட்டு யானை வேட்டை!

வீட்டுக்காக வன்று நீ போரிடுவது!
நாட்டுக் காக! தமிழீழ நாட்டுக்காக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/139&oldid=1424633" இலிருந்து மீள்விக்கப்பட்டது