பக்கம்:கனிச்சாறு 3.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  115


100  மாவீரர் நாளிலே, மலர்க தமிழீழமே!

மாவீரர் நாளிது! மாவீரர் நாளிது!
மக்கள் உரிமைகள் மலர்கின்ற நாளிது!

தமிழீழப் புலிகள் தாயகம் மீட்டிட
உமிழ்ந்த - உமிழ்கின்ற உயிர்களை வணங்கிடும்
மாவீரர் நாளிது! மாவீரர் நாளிது!
மக்கள் உரிமைகள் மலர்கின்ற நாளிது!

நாவீரம் பேசிடும் அரசியல் நடிகர்கள்,
மக்களை நசுக்கிடும் நயவஞ்சகக் கொலைஞர்கள்,
காவி உடையணி புத்த பிக்குகள்,
கயமை மலிந்திடும் சிங்களக் காடையர்

மேவுமிக் கொடியரை மிதித்துப் போர் செய்து,
மின்னுல[1] கெய்திய தமிழீழ இளைஞரின்
இன்னுயி ரெல்லாம் எழுச்சியாய் விளைகின்ற
மாவீரர் நாளிது! மாவீரர் நாளிது!
மக்கள் உரிமைகள் மலர்கின்ற நாளிது!

உடல்களை விதைகளாய், உணர்வை உரங்களாய்,
விடலையர் குருதியே வீழுசெம் புனலாய்
விதைத்தனர் வீரம், வேளாண்மை நடந்தது!
கதைத்த தமிழீழக் கருத்துகள் விளைந்தன!

மாவீரர் நாளிது; மாவீரர் நாளிது!
ஆவிகள்[2] மகிழ்கின்ற அருமை நாளிது!
மாவீரர் நாளிலே, மலர்க தமிழ் ஈழமே!

-1990

  1. 1. மின்னுலகு - புகழ் உலகு.
  2. 2. ஆவிகள் - மறைந்த மாவீரர் உயிர்கள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/144&oldid=1424637" இலிருந்து மீள்விக்கப்பட்டது