பக்கம்:கனிச்சாறு 3.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

௧௫

கனிச்சாறு மூன்றாம் தொகுதி
(தமிழ் நாட்டுரிமை, தமிழீழம்)

பாடல் விளக்கக் குறிப்புகள்
- தமிழ் நாட்டுரிமை-

1. தமிழகத்தின் உரிமைகளை (1952-ஆம் ஆண்டுத் தேர்தலிலும் பேராய (காங்கிரசு)க் கட்சி வெற்றி பெற்று இந்திய அரசு ஒவ்வொன்றாய் பறித்துக் கொண்ட நிலைகளை விளக்கித் தமிழரை எழுச்சி கொள்ள வைக்கும் நோக்கில் எழுதப் பெற்றது. தென்மொழி தொடங்கப் பெறுவதற்கு 7-ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப் பெற்றது.
2.தமிழர்க் கென்று தனித்த நாடு வேண்டப் பெற்று எழுதப் பெற்றது. (பாடலின் முதல் வரியில் 'திராவிடத்தை'- எனும் சொல் கையாளப் பெற்றிருந்தாலும் அது தமிழகத்தையே பொருள் படக் கொண்டது).
3. பள்ளியில் சமற்கிருதத்தைப் பாடமொழியாக ஆக்கவேண்டும் என்று இந்திய அரசு தீர்மானித்த பொழுது கொளுத்திய புரட்சித் தீ.
4.பாரதிதாசனாரின் 'குயில்' மீண்டும் வெளிவந்தபொழுது அதில் வெளியிடப் பெற்ற விளிப்பாட்டு.
5.மக்கள் பண்பாட்டாலும், சூழ்ச்சிகளாலும், நாகரிகப் புன்மைப் போலி உணர்வுகளாலும் தாழ்ந்துபோகும் நிலைகண்டு வருந்திப் பாடியது.
6.வடவர்க்கு ஒரு முகில்விடு தூது.
7.பிரிவினை பேசுவது பிழை என்ற ஆட்சியாளர்க்கு விடையாகக் கூறியவை.
8.இப்பாடல் பேராயக்கட்சி தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த 1960ஆம் ஆண்டு வாக்கில் எழுதப்பெற்றது. ஐயா அவர்களின் சுவடியில் இருந்த இப்பாடல் இதுவரை அச்சில் வராதது. இடையில் தென்மொழி இல்லத்துள் தண்ணீர் புகுந்து அழித்துவிட்டதால் அழிந்துபோன பகுதிகளிலிருந்து பெயர்த்தெழுதியதில் சரிவரத் தெரியாத வரிகள் இவ்வாறு கோடிடப்பட்டுள்ளன. பேராயக்கட்சி அமைச்சர்களின் செவிசாய்க்காப் போக்கைக் கண்டிக்கிறது இப்பாடல்.
9.நாட்டினுள்ள இருண்டநிலை, ஓர் ஏக்கம். 10.1965-ஆம் ஆண்டில் நடந்த மாணவர் இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு உணர்வூட்டமாக நின்றவை இத்தகைய பாடல்களே. இந்தியின் ஆளுமையினை மீட்கவும், தமிழைக் கட்டிக் காக்கவும் எழுதப்பெற்ற நூற்றுக்கணக்கான பாடல்களுள் இதுவும் ஒன்று.
11.அரசியலை நடத்துகின்ற அமைச்சர்களின் கொடுமைகள் கண்டு கொப்பளித்தது.
12.பேராயக் கட்சியின் அன்றைய முதலமைச்சராய் இருந்த பத்தவச்சலத்தின் ஆளுமைப் போக்கைக் கடிந்து பாடியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/16&oldid=1513052" இலிருந்து மீள்விக்கப்பட்டது