பக்கம்:கனிச்சாறு 3.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௦

கனிச்சாறு மூன்றாம் தொகுதி


56. எத்தகைய அடக்குமுறைகளும் இல்லை என்றாலும், தமிழகத்தை வடநாட்டார் ஆளுமை செய்வது எனும் நிலை இருக்கு மட்டும் தமிழ்த் தாய்நாட்டுப் பிரிவினை வேண்டும் என்றும். பிறவெல்லாம் வீணென்றுமே பேசுவோம் என்கிறார் பாவலரேறு இப்பாடலில்.

57. ஈராயிரம் ஆண்டாய் வாய் வீரம் பேசிடும் நமக்கு எதிரிகளைவிட இரண்டகர்களே அதிகம். எதிரிக்குத் துணைபோகும் உலுத்தரையும், கலை, காமக் கயவரையும் சாய்த்திட அடங்காமல் ஆர்த்தெழுவோம். அவ்வாறு செய்திட்டால் அட்டா.... நம் தமிழ ஆட்சி இங்கே என்று வழி காட்டுகிறார் பாவலரேறு.

58. தம் வாழ்நாளுக்குள் ஒரு கை பார்ப்போம். நிலம் மீட்போம்! என்கிறார் பாவலரேறு.

59. உரிமைபெற விரும்பாத உளம் என்ன உளமோ, உடனெழுந்து பாயாத உரமென்ன உரமோ? என்கிறார் பாவலரேறு.

60. தமிழக உரிமைக் கோரிக்கைகள் வன்முறை எனத் தலைப்பிட்டு நசுக்கப்படுவதைக் கண்டிக்கிறது இப்பாடல். அதிகாரக் கொடுமையர் ஆட்சி ஆண்களும் பெண்களும் திரள்வதிலேயே மாய்ந்து போகும் என்கிறார் பாவலரேறு.

61. தொண்டர்கள் எல்லாம் விழிப்பற்றுப் பிளவுபட்டதால் தலைவர்கள் எல்லாம் செழிப்புற்று வாழத் தொடங்கினர். மொழி, இன, நாட்டுப்பற்றுத் தொண்டர்கள் முனைப்புற்று முனைதல் வேண்டும் என அறிவுறுத்துகிறார் பாவலரேறு.

62. தமிழர்தம் உரிமை முயற்சிகளுக்கெல்லாம் எதிராய் இந்தியக் கருத்துகள் அன்றைக்கு இராசீவ் ஆட்சியில் கடுமையாகப் பரப்பப்பட்ட சூழலில் எழுதப்பெற்றது இப்பாடல். பார்ப்பனர், வடவர். வணிகரே இந்தியர். அவர்களின் இந்தியா. தமிழருக்குதவாது என்றும் தமிழரெலாம் தமிழராய்த் திரளாமல் தமிழ்நாட்டைப் பெறாமல் தமிழர் வாழ்வில்லை என்றும் அறிவுறுத்துகிறார் பாவலரேறு.

63. இந்தியா என்றாலே ஆளுமை வெறி கொண்டு, அடிமை செய்வதே - என்று எளிமையாய் விளக்கும் பாடல். ‘தமிழ்ச்சிட்டு’ பயிலும் சிறுவர்களுக்கு ஏற்றவகையில் எழுதப் பெற்றது இப்பாடல். தமிழ்ச்சிட்டில் இந்தியத்தை மறுத்து வெளிவந்த முதல் அட்டைப் பாடலாகும்.

64. இப்பாடலும் முந்தைய பாடல் எழுதப்பெற்ற காலச் சூழலிலேயே ‘தமிழ்ச்சிட்டில்’ முன்னதற்குப் பின் எழுதப்பெற்றது. மக்களுக்கு எதிரானவற்றையெல்லாம் விழாக்களாகச் சொல்லும் பாரதக் கூத்தாட்டமே பாரதப் பெருமை என்றால், பாரத ஒற்றுமை என்றால் ஊரதிரும் புரட்சி ஒன்று தேவையே!

65. முந்தைய பாடல் சுட்டப்பெற்ற காலச் சூழலைத் தொடர்ந்தே இப்பாடல் ‘தென்மொழி’ அட்டைப்பாடலாய் வந்தது. வாய்வீரப் பேச்சினால் எதுவும் நடந்திடாது. தமிழகத்தை மீட்காமல் தரங்கெட்டுப்போவதுவோ என்று இடித்துரைக்கிறார் பாவலரேறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/21&oldid=1513053" இலிருந்து மீள்விக்கப்பட்டது