பக்கம்:கனிச்சாறு 3.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  3


1

சீறியெழு!


நாடவர்பால் கிடைத்ததென நம்மவரை நசுக்கும்
நாட்டத்தோ டன்னவரின் நலம்பேணி நின்றே
ஈடவர்போல் இல்லையென இத்தரையின் மக்கள்
எண்ணுமா றவர்வாழ நாமிருந்து வந்தோம்!
ஏடெழுதி என்னபயன்? இந்நாட்டை யன்னார்
ஏய்ப்பதுகண் டெள்ளளவுந் துணிவில்லா திருந்தால்!
வாடுகின்ற மக்களெலாம் வதங்கிமடி யும்முன்
வந்திடுவீர்! பெரும்படையைக் கூட்டிவழி நடப்போம்! 1

பனிமலையின் பாங்கினிலே படுத்திருந்தா ரெல்லாம்
பசுந்தமிழின் நாட்டில்வந்து நடந்துலவு கின்றார்!
நுனிநிலையில் வாழ்ந்துவந்த நந்தமிழின் மாந்தர்
நோவேற்று நலிவேற்று நொந்திறந்து போவார்!
இனிநிலையை வளர்தல்விட் டாலவர்கள் நம்மை
ஏறிமிதிப் பாரிதைநா மின்றுணர்ந்து கொண்டு,
முனியவிலை யாயினவர் முன்னேறிப் போக
முத்தமிழின் நாடுமந்த எத்தர்கையுட் போமே! 2

பஞ்சாலை யவர்கையுள்; பல்பொருளும் அங்கே!
பாய்ந்தோடும் நீர்தடுக்கப் பேரணைகள் அங்கே!
எஞ்சாத வளமனைத்தும் ஏற்றமுறச் செய்ய,
ஏதேது தேவையவை எல்லாமும் அங்கே!
அஞ்சாத படையனைத்தும் அன்னவரின் கையுள்!
அரசாட்சிக் கருவூலம் அன்னவர்க்குச் சொந்தம்!
பஞ்சாக நாம்பட்டுப் படைத்தபெருஞ் செல்வம்,
பனிமலைக்கும் போகுதெனில் நமக்குவளம் எங்கே? 3

புகைவண்டி நிலையத்தின் போக்கவரின் கையுள்;
புறநாட்டி லிருந்திங்கே இறக்குமதி செய்யும்
வகைவகையா லெப்பொருளும் வடநாட்டைவிட்டு
வருவதிலை தென்னாட்டுக் கேனென்று கேளோம்.
தொகையென்ன தரமென்ன நம்நாட்டு மக்கள்
துணிவில்லை யாயினவர் தொகைபெருகிப் போகும்!
புகையுண்ணும் குடிலினில்நாம் பொறையிழந்து சாக,
புரட்டுகின்றார் பெருஞ்செல்வம் கடுகுமிடி யின்றி! 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/32&oldid=1437726" இலிருந்து மீள்விக்கப்பட்டது