பக்கம்:கனிச்சாறு 3.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


அன்னவரும் அன்னவரின் அடியில்நடப் பாரும்
அல்லாமல் எந்தமிழர் எங்குவாழ் கின்றார்;
முன்னரவர் சொன்னதென்ன? மொழிவதென்ன ஈண்டு?
முடிவுவரை இவ்வாறே முனையாது நின்றால்
தென்னவர்க்குத் தேய்வென்று தெரிந்துகொள் வீரே!
தெருவெல்லாம் அவர்கூச்சல்! தெருக்கடைகள் தோறும்
அன்னவரின் ஆட்கள்! அவர் வீழாது காத்தே
அடிபணிய நம்மாட்கள்! அரித்துவரு கின்றார்! 5

நொடிக்குநொடி யன்னவர்கள் வந்துகுவி கின்றார்!
நொடிக்குநொடி நந்தமிழர் தாழ்ந்துபோ கின்றார்!
அடிக்கடியத் தீயவரின் அழகுமனை நிற்கும்;
அவரேறும் வண்டிகளை யெந்தமிழர் ஓட்டிப்,
படிக்குப்படி தாழ்ந்திழிவுப் பாதையினை நோக்கிப்
பதைப்பதுவே யல்லால்நந் தமிழரெது கண்டார்?
துடிக்குதடா நம் நெஞ்சம்! துணிவெல்லாம் எங்கே?
தோளெல்லாம் சூம்பிற்றோ? மறமொழிந்து போச்சோ? 6

சீறியெழு துஞ்சுகின்ற செம்புலியே! முன்னோர்
சேர்த்தமைத்த வீரத்து மாளிகையைக் காக்க,
ஊறிவரும் தோள்தந்தே உயிர்தந்து காப்பாய்!
'உணர்வில்லை' யென்றவர்கள் உரைசெய்யும் முன்னர்,
கூறுசெய் யன்னவரின் கொழுத்துள்ள உடலை!
கோடிபெறும் உன்வீரம் முனிந்துவிடின்; அறிவேன்!
ஏறிவரும் நீர்போல ஏய்ப்பவரை மாய்ப்பாய்;
எழுந்திரு நீ புலித்தமிழா! ஏறே! இந் நொடியே! 7

-1952


2  எந்நாளோ?

இந்தத் திராவிடத்தை யாள்வதென் மக்களென்று
இயம்புநா ளெந்த நாளோ?
எழிலோடு செந்தமிழை யோதுவதுஞ் செப்புவதும்
யாம்காணும் நாளெந் நாளோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/33&oldid=1424524" இலிருந்து மீள்விக்கப்பட்டது