பக்கம்:கனிச்சாறு 3.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


3  புரட்சித் தீ!


செந்தமிழ் தாழ்ந்தது; செத்தமொழி உயர்ந்தது;
செய்வதினி நாமிங் கென்ன?
செம்மைஅர சாட்சியிதாம் என்றுசில தொண்டைகள்
சீறுவதென் நோக்க மென்ன?
தந்திரத் தோடுதமிழ் நாட்டினுக் காந்திரத்
தரகரை வைப்ப தேனோ?
தாராளமாய்க் கடையின் தேங்காயில் ஒன்றை வழிப்
பிள்ளையார்க் கீந்த தேனோ? 1

அப்பம் பிரித்தகதை யாக்கிட்ட குரங்கருக்
காரிதைப் போயு ரைப்பார்!
'அதுதான் நல் லற'மென்றே அதிகாரங் கொடுத்தமர
மண்டையினை ஆரொ றுப்பார்?
“தப்பீது, சரியீது" என்றேநன் றுணராத
தரகர்க்கிங் கென்ன வேலை!
தாய்நாட்டை நாமேங்க பாற்றானுக் கீந்தமாக்
கட்டைக்குக் கிழிக்க ஓலை! 2

எதிரிகளின் உடலெலும்பை ஒடித்தடுக்கி வைத்ததிலே
எண்ணெயெனக் குருதி யூற்றி,
ஏற்றமுடன் புரட்சிப்பண் பாடிநன் றாடியதில்
எரியுந்தீ வைப்பம் ஏற்றி!
அதிரும்படி கூவியழைத் தமைச்சர்களை மாற்றி, தமிழ்
அரசினை வாழவைப் போம்.
அன்றேல், நம் வீரம், மறம் என்றெல்லாம் பேசியவை
அத்துணையும் வெறும் பொய்யாய்ப் போம். 3

புரட்சித்தீ மூட்டுங்கள்; புல்லர்தமை ஓட்டுங்கள்;
புதியவர சாட்சி நாட்டிப்
புதுவாழ்வுப் பாதையினில் பகுத்தறிவி னோடுபெரும்
புகழோடு வாழ்வம் கூட்டி!
புரட்சித்தீக் கொளுத்துங்கள்! புதுவழிகை யாளுங்கள்!
பூந்தமிழின் நாட்டைக் காத்துப்
பொன்போலப் போற்றுவோம்; புதுவாழ்வு ஏற்றுவோம்
புகழ்காட்டும் பாடல் யாத்து! 4

1954
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/35&oldid=1424526" இலிருந்து மீள்விக்கப்பட்டது