பக்கம்:கனிச்சாறு 3.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  7


4  குயிலே!

நாவும் இனிக்க, நறுந்தமிழின்
நறவை மாந்தி நெஞ்சினிக்கக்
கூவுங் குயிலே! தேமாவின்
கோதுண் டிருந்து மலர்மலர்வாய்த்
தாவுங் குயிலே! தண்டமிழின்
தனித்த சீர்த்திப் பெரும்புலவன்
பாவும் இசைத்தே யாங்கொடுக்கும்
பாலும் பழமும் பெறுவாயே! 1

ஏடும் மணக்க, இளந்தமிழில்
இசையும் மணக்கத் தீம்பாடற்
பாடுங் குயிலே! பழந்தமிழர்
பகையும் மறந்தே பணியாற்றித்
தேடும் பெருமை திகழ்தற்கே,
தீம்பண் ணிசைத்துத் தனித்தமிழர்
நாடுங் கேட்டே, யாங்கொடுக்கும்
நறவுந் தளிரும் பெறுவாயே! 2

நாளும் பயில நற்றமிழ்ப்பா
நாட்டுங் குயிலே! ஒன்றுரைப்பேன்,
கேளாய்! சீர்த்தித் தனிநாட்டைக்
கேட்டும் மறுப்பார்க் கிந்நாட்டுத்
தூளும் மிஞ்சா தென்பதையும்,
தோள்கள் கோடி தாயின்மேல்
சூளுற் றதையும் நீகூறிச்
செந்தேன் தினைமாப் பெறுவாயே! 3

1958
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/36&oldid=1424527" இலிருந்து மீள்விக்கப்பட்டது