பக்கம்:கனிச்சாறு 3.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


8  ஏய்ப்பாரை மாய்த்தல் வேண்டும்.

செந்தமிழ்நன் னாட்டிற்குத் தொழிற்றுறையில்
சீர்திருத்தம் வேண்டுமென்றோம்; தில்லி வாழ்வோர்
இந்தியநன் னாட்டிற்குள் தொழில்முன் னேற்றம்
எங்கிருந்தாற் றானென்ன? தில்லி யொன்று
முந்திவிடின் போதுமென்று தமிழ்நாட்டார்கள்
மகிழ்வுகொள வேண்டாமா? என்றுசொல்லிச்
சிந்தைபிள வானதற்குச் செம்மண் பூசிச்
சரிசெய்வோர் போலமகிழ் வெய்தினார்கள் !

தமிழ்மொழியில் முன்னேற்றம் வேண்டு மென்றோம்!
தில்லியறி வாளரதைத் தள்ளிவிட்டுத்
தமிழ்மொழியும் பிறமொழியும் இந்தி யென்னும்
தில்லிமொழி முன்னேறில் மகிழவேண்டும்.
நமிலுயர்வு தாழ்வுகளே(து) இந்தி வந்தால்
நமக்கெல்லாம் பெருமைதான்; என்று சொல்லி
இழிசலடைந்து போனதற்குச் சேற்றைப் பூசிச்
சரிசெய்வார் போலமகிழ் வெய்தினார்கள்!

தில்லியிலே பேரணைகள் கட்டி விட்டால்
திகழ்பரத கண்டமெலாம் நீரோடாதோ?
தில்லியிலே ஏருழுது விதைத்து விட்டால்
தென்னாட்டில் விளையாதோ? என்றவாறு
தில்லியினர் நாடகத்தை நடத்துதற்குத்
தென்னாட்டுக் குருடரெல்லாம்......
...................................................... ............
................................................................
தாம்போடும் திட்டமெலாம் தில்லிவாழ்வோர்
தாமுயர்ந்து வாழற்கே! அவைகட் கெல்லாம்
ஆம்போடும் குருடரெல்லாம் செவிட ரெல்லாம்
அமைச்சேற்றுத் தம்குடலைக் கழுவுகின்றார்
நாம்போடும் பேரொலிக்குச் செவிசாய்க்காது
நாமம் ’போட் டேய்ப்பாரை மாய்த்தல் வேண்டும்
தேம்பாயும் தமிழ்நாட்டார் பிணமா குமுன்
தெவ்வரெலாம் பிணமாகும் வகையைச் செய்வோம்!

-1960
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/39&oldid=1424536" இலிருந்து மீள்விக்கப்பட்டது