பக்கம்:கனிச்சாறு 3.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி

“வடக்கன் பேசிடும் பேச்சே பேச்சாம்;
இடக்காய் அவன் நமக் கிட்டதே சட்டம்!"
என்றே அரசும் இயம்பிடு மாயின்
அந்த அரசும் இன்றே அழிக!

மானம் இழந்த மக்களும் மக்களோ?
கூனும் குருடும் கொடிமரம் பிணிக்கையில்
உலகை ஆண்ட தமிழரும் ஓய்வதோ?
மலர்ச்சி இன்றி இவரால் மாய்வதோ?
அடிமையா யிறந்திடில் சாவு இனிப்பதோ?
மிடிமையால் உரிமைச் சாவு கசப்பதோ? 40

இன்றே எழுக! எந்தமிழ்க் கூட்டம்
ஒன்றே கருதுக; ஒன்றே செய்க!

உள்ளக் கருத்தை உணர்த்துதல் மொழியே!
உள்ளக் கருத்திற் குலைவைப் பாரெனில்
வெள்ளம் போலும் திரளுக! திரண்டு
தீப்போல் கனல்க! களிறாய்ப் பிளிறுக!
பாய்க புலியென; பகையை விரட்டுக!
மாய்க தோற்றிடின்; மனைவி மக்களைத்
தூசென மதிக்க! உள்ளந் துறக்க!
மாசெனக் கருதுக, மானம் இலாவுடல்! 50

இறுதியாய் நமக்கிடும் தண்டம் என்னெனில்
உறுதியாய் நல்லுயிர் வாங்குதல் ஒன்றே!
மானந் தலைகெட மடியேந் துவது
வீணரின் செய்கை! மிடியரின் வினைவகை!
செந்தமிழ்க் குருதி ஓடுவ தென்னில்
முந்துவீர் தமிழரே! முந்துவீர் தமிழரே!
சிந்துவீர் குருதி! சிந்திய குருதியால்
இந்திய மண்ணில் தமிழக இணைப்பை
உடனே பிரித்திடற் கொருவழி செய்க!
கடனது தமிழர்க்கு! களிப்பொடு பொங்குக! 60

முன்னர்த் தோன்றிய விடுதலைப் படைகள்
இன்னவா றில்லை என்னும் படிக்கே
வெற்றி நினைவொடு நடந்து காட்டுக!
முற்றுக இன்றோ(டு) அடிமை வரலாறு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/43&oldid=1424532" இலிருந்து மீள்விக்கப்பட்டது