பக்கம்:கனிச்சாறு 3.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  15


எந்தமிழ் நாட்டில் இதுவரைத் தோன்றிய
முந்து படையெலாம் மூச்சிலாச் சாப்படை!
பெரியார் நடத்திய பெரும்படை என்றோ
உரிய கூலியைப் பெற்றுணர் விழந்தது!
பின்னர் வந்தவை கூலிப்பட் டாளம்!
'இன்னர் பெரியர்; இன்னவர் தலைவர்; 70
இவரடி வைப்பின் அதன்பின் ஏகுவோம்!'
எனஎண் ணாமல் எழுக மறவனே!
மனம்உன் னுடையது; நினைவுஉன் னுடையது!
முழுநினை வெல்லாம் விடுதலை முழக்கம்!
விடுதலை ஒன்றே வேண்டிய தென்னிற்
கொடுதலை! கொடுஉயிர்; விடுதலை குமிழ்க்கும்!

பல்லை இளித்தா விடுதலை பெறுவது?
சொல்லை அடுக்கியா உரிமை சுவைப்பது?
கரையில் நின்றா கடலைக் கடப்பது?
விரைக தமிழனே விடுதலை நோக்கி! 80
பொங்கும் உணர்வால் விடுதலை முழக்கம்
எங்கும் எழுந்திடச் செய்க! தமிழனே!

நாட்டுக்கு விடுதலை நண்ணுவ தாயின்
வீட்டுக்கு வீடு மறவரைக் கூட்டுக!
நெஞ்சுக்கு நேராய்க் கத்தியை நீட்டினும்
அஞ்சாத தமிழர் ஆயிரக் கணக்கில்
எழுவா ராயின் இந்தி நுழையுமா?
தொழுதால் அடிமை விலங்கைத் துணிப்பரா?

சோற்றைக் கருதியா கல்வி கற்பது?
ஊற்றை அடைத்தா நீரை இறைப்பது? 90
பித்தக் குரங்கு பேய்பிடித் தன்ன
இத்தமிழ் நாட்டின் தலைமையர் இருப்பார்!
அவர்வாய் திறந்தால் நாடு பேசியதா?
அவர் ’ஆம்' என்றால் ஒப்பினோம் என்பதா?
சோற்றுக் குடலும் மூளையின் தோற்றமும்
ஒன்றுபோ லாயின் உணர்வும் ஒன்றா?
தமிழர் தலைவர்(!) பத்த வத்சலம்
உமிழும் சொற்கள் தமிழர் உரைப்பதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/44&oldid=1424531" இலிருந்து மீள்விக்கப்பட்டது