பக்கம்:கனிச்சாறு 3.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி

இந்திக் கெதிர்ப்பிலை என்றவர் மொழியும்
மந்தித் தனந்தான் தமிழரின் ஒப்பமா? 100

உரிமைக் கடிப்படை உயிர்ப்போ ராட்டம்!
நரிமையும் நாய்மையும் அடிமையர் சொத்து!
விடுதலைப் பேச்சுக்குச் சாதலே விலையெனில்
விலையினைக் கொடுத்து விடுதலை பெறுக!

மாணவர் வருக! அறிஞர் வருக!
மானக் கற்பின் மங்கையீர் வருக!
இளமை மொய்க்கும் கனவினார் வருக!
வளமை குன்றா மறவோர் வருக! 110

தீத்திறஞ் செய்யினும் நாத்திறந் திறம்பாப்
பூத்த கொள்கைப் புலவரீர் வருக!
பாத்திறஞ் சாற்றும் பாவலர் வருக!
மணவறை பாரா மணியிளம் பெண்டிரும்,
கணவரை இழந்த கைம்மை மகளிரும்
தமிழர் விடுதலை என்னுந் தாழ்விலா
அமிழ்தாம் உணர்வில் அகமகிழ் வெய்துக!

மொழிப்போ ராட்டம் தீயென மூளுக!
விழிப்பிலார்க் கில்லை விடுதலை இன்பம்!
நாய்கட் கென்றும் நக்கலே வாழ்க்கை! 120
பேய்களின் ஆட்சியை இன்றே தொலைத்திடப்
பீறிட்டுக் கிளம்பும் குருதிமேல் ஆணை!
கூறிட்(டு) என்னுடல் சிதைப்பினும் பகைவரை
ஏறிட்டுப் பாராத நெஞ்சுமேல் ஆணை!
பூக்கிலா உரிமைஎன் உயிர்தரப் பூக்குமேல்
தூக்கினில் இடட்டும்,என் உடலைஇவ் வரசே!

-1965
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/45&oldid=1424530" இலிருந்து மீள்விக்கப்பட்டது