பக்கம்:கனிச்சாறு 3.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  23

உரமில்லை நெஞ்சினில், தமிழர்க்கிந் நாளில்!
ஊராளும் துடிப்பில்லை அவர்சூம்பல் தோளில்!
மரமென உணர்விழந் தார்! மறங் கெட்டார்;
மானத்தை என்றைக்கோ கொட்டாவி விட்டார்! (உருப்படி)

தாய்மொழிப் பற்றில்லை; இனப்பற்று மற்றார்!
தம்மினத் தாரையே பகையெனச் செற்றார்!
நாய்மொழி என்னினும் அவர்கற்க லுற்றார்;
நாற்பது நூற்றாண்டாய் அடிமையிங் குற்றார்! (உருப்படி)

வெற்றுமை, வெள்ளைத்தாள், எழுத்துப்போ ராட்டம்!
வீறுகொள் என்றிடில் எடுப்பர்நல் ஓட்டம்!
ஒற்றுமை என்பது தாளொட்டும் பசையே!
உயர்பாடல் என்பது கழுதைகத் திசையே! (உருப்படி)

-1969


26  இறுதி உரை !

ஆட்டிப் படைக்கும் அரசுக்கும் ஆரியர்க்கும்
ஈட்டியால் செந்தமிழர் தீட்டும் இறுதியுரை!
கூட்டில் அடைத்தீர்; குமுகாயச் சீரழித்தீர்;
வாட்டி வதைத்தீர்; வறுமை யுறச்செய்தீர்!
நீட்டிப் படுத்திடவும் கூனாமல் நின்றிடவும்
மாட்டாமல் எம்மவரை வல்லடிமை செய்துவிட்டீர்!
காட்டிக் கொடுக்கும் கயவரிங்கு உள்ளவரை
நாட்டின் விடுதலைக்கே நாவசைக்க மாட்டீர்கள்.
கேட்டோம்; கிளர்ந்தெழுந்தோம்;
கீழென்றே எண்ணிவிட்டீர்.
கூட்டிலுள்ள ஆவி கொதித்திடுமுன், செங்குருதி
சூட்டினால் பொங்கிச் சுழன்றிடுமுன், இந்நிலத்துக்
கோட்டைக் கடந்துய்வீர்! இன்றேல் கொடிமுகத்து, உம்
கூட்டிற் கமைப்போம் குழி!

-1969
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/52&oldid=1424543" இலிருந்து மீள்விக்கப்பட்டது