பக்கம்:கனிச்சாறு 3.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி

எந்தாய் நிலத்தை எமக்குக் கொடுவென
வெள்ளையர் தம்பால் விடுதலை கேட்ட
உள்ளொளி நிரம்பிய உரிமை உளத்தினர்! 20
பெண்டிர் அனைவரும் கற்பின் பெற்றியர்;
பண்டை வரலாறு படைத்த பாவையர்!

சுருங்கச் சொன்னால் தமிழரோ டிவர்கள்
ஒருங்கே பொருந்திய ஓரினம் எனலாம்!
ஆயினும் இற்றைத் தமிழர்போல் அடிமையால்
தாயினம் பேணாத் தகவிலர் அல்லர்!
காக்கை போலக் கரைந்துண்ணும் பண்பினர்;
பீக்கைச் சோற்றுக்குப் பிறர்க்கு நம்போலக்
காட்டிக் கொடுக்கும் கயவர்கள் அல்லர்!
நீட்டி முழக்கு வானேன்? இங்குப் போல், 30
வரலா றழிக்கும் வையா புரிகள்,
திறமையாய்ப் புளுகும் தெ. பொ. மீக்கள்,
சொல்லின், 'செல்வ'ராம் சோத்துப் பிள்ளைகள்,
மூக்கு வெயர்த்த முத்துச்சண் முகங்கள்
பத்தி லக்கப் பத்தவத் சலங்கள்,
சுத்திக் காம்பாம் சுப்பிரமணி யன்கள்,
எனும்படி அவரினத் தெவரும் இருக்கார்!
இனும்பிடி படும்படி எடுத்துரைப் பதெனில்
அற்றைக்குத் தமிழினம் இருந்த அமைப்புப்போல்
இற்றைவங் காளியர் இனமென் றுரைக்கலாம்;
(இற்றைத் தமிழர் போல் உலகில் இழிந்த 40
ஒற்றைத் தனியினம் உவமைக் கில்லையே!)
ஈங்கிது கிடக்க!
இத்துணைப் பெருமையும்
தாங்கும் வங்காளத் தலைமை மக்களின்
இன்றைய நிலைமை என்ன? என்றறிந்தால்
கன்றிய நெஞ்சம் கண்ணீர் வடிக்கும்!
மயிர்பொடித் துதிரும்; மாவுடல் நடுங்கும்;
உயிர் துடித்(து!) 'ஓ'வென ஓலமிட் டழுங்கும்!
வாழ்க்கை வெறுக்கும்; உலகெலாம் வறண்டஓர்
பூழ்க்கைப் புழுதியாய்க் கண்களிற் புலப்படும்!
ஏந்தலர், பகுத்தறிவு ஏய்ந்தவர் எனப்படும் 50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/57&oldid=1424547" இலிருந்து மீள்விக்கப்பட்டது