பக்கம்:கனிச்சாறு 3.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி

அன்ன இளைஞரை அன்புடன் வேண்டுவேன்;
என்னுரை தவறெனில் என்னைத் திருத்துக!
விடுதலை என்பது வேண்டுகோள் அன்று!
தொடுதலைத் தவிர விடுதலை அறியாப்
பூட்கையோர் தம்மின் வாழ்க்கையே விடுதலை!
வேட்கையும் உண்டு;அது நாடுவேண் டுவதே! 90
எண்ணமும் உண்டு;அதும் எதிரியைப் பொடிப்பதே!
பண்ணும் உண்டு;அதும் படைப்பா டல்களே!

அத்தகு விடுதலை ஆர்த்தஓர் இனந்தான்
மெத்தவங் காளியர் மேட்டிமை இனமாமி!
அந்த இனத்தின் அரற்றலும் அழுகையும்
எந்த இனத்தின் எழுச்சியும் ஒடுக்கும்.
விடுதலைப் பேச்சையே வெறுப்புடன் ஒதுக்கும்!
கெடுதலை நமக்கேன், எனவினா கேட்கும்!
உரிமை கேட்பதே உயிர்க்கொலை என்னும்!
நரிகளும் நாய்களும் நாயகம் ஏற்றால் 100
கழுகும் காக்கையும் காவல் காக்கும்!
அழுகலும் நாறலும் அன்றாட நிகழ்ச்சி!
உண்மையும் உரிமையும் உயிரற்றுக் கிடக்க
வெண்மையும் வெறுமையும் வெண்குடை பிடிக்கும்!

வெறியோன் ஒருகால் அரசினை வென்றால்,
அறிவினார் எவரும் ஆட்சிக்கு வேண்டா!
எத்தகை ஆற்றலும் எழுச்சிகொள் ளாமல்
மெத்தவே அடக்கவும் சொற்களால் மிரட்டவும்
படிந்தால் அடிமைப் படுத்தவும், படிப்படி
முடிந்தால் அழிக்கவும் அழிவினை மூடவும், 110
துணிந்து செய்யலாம்; பொய்யைத் தூற்றலாம்!
பணிந்து செல்லுதல் பழிக்கிடன் என்று,
பதவிக் கையன் பலவும் செய்யலாம்!
உதவிக்குத் தம்போல் ஒருவரை அழைக்கலாம்!
‘அமெரிக்கா' போன்ற,வல் லரசையும் அணுகலாம்!
குமுறிக் குமுறிக் குலைநடுங் கிடவே
மக்களைக் கோடியாய் மாளச் செய்திடத்
தக்க கருவிகள் தந்தும் உதவலாம்!
காலக் கொடுமையால் மக்களின் கருத்துகள்
ஓலத்தும் சாவிலும் ஒடுங்குதல் உணர்க! 120

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/59&oldid=1424549" இலிருந்து மீள்விக்கப்பட்டது