பக்கம்:கனிச்சாறு 3.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி

இந்தியால் இறந்த இருநூற்று வரையும்
செந்தீக் கொலுவிச் சிதைந்தோர் நினைவையும்
ஒருங்கே மறந்து,அவர் உயிர்பறித் திட்ட
பெருங்கல் நெஞ்சன், அரசியல் பேயன்,
பத்த வத்சல சுப்பிர மணியரோ
டொத்து,ஊ தற்குநாம் ஒப்பிய பின்னரும்,
தன்னாட்சிக் கொள்கையைத் தரையினில் புதைத்துத்
தென்னையும் பனையும் தேடிய பின்னரும்,
என்னருந் தமிழகம் விடுதலை எய்திட
முன்னர் எழுந்து முழங்குதற் காருளர்?

வடவர் வண்டியில் வலமோ இடமோ,
இடமுண் டென்றால் ஏறுங்கள் என்றே
தமிழரை அழைக்கும் தலைவரே அல்லால்
கமழும் விடுதலைக் களம்புக வருவர்,யார்?
அமைச்சர் பதவியில் அமர்ந்ததும் அவரவர்
நமைச்சலை அடக்கவே நாழிகை இன்றி
பட்டந் தாங்கவும் பட்டுடை யேற்கவும்
கொட்டம் அடிக்கவும் கொடுப்பதை வாங்கவும்
நேரம் இன்றி, நினைவின்றி அலைகையில்
காரம் போன விடுதலைக் கனவை
எண்ணிப் பார்த்திட எவருளர்? உரிமைப்
பண்ணின் எழுச்சியைப் பாடிட வருவர்யார்?

என்னருந் தமிழரை இதோ,காண் கின்றேன்;
தந்நலம் ஒன்றே குறிக்கோள் தாங்கிப்
பொதுநலம் என்றால் பொருளெது வென்னும் 180
நொதிந்து போன நொள்ளையர் ஒருபுறம்!

அந்தநொள் ளையரை ஆரவா ரத்தால்,
தந்திரப் புளுகால் தலைத்தலைப் புகுந்தே
ஏமாற்றிப் பிழைக்கும் எத்தர் ஒருபுறம்!

தாமுமாற் றாமல், தமரையும் விடாமல்
நெடுங்கிடைக் குறுக்காய் நீட்டிப் படுத்தே
ஒடுங்கிய உ.ளத்தொடு பழமையில் ஊறிப்
புலனும் பொறியும் புரையிட் டோடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/61&oldid=1424551" இலிருந்து மீள்விக்கப்பட்டது