பக்கம்:கனிச்சாறு 3.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி

44  ஏறுநடை போட்டு நட!

ஏறுநடை போட்டுநட!
எக்காளம் ஊதிநட!
வீறு தமிழ்த் தாயின் புகழ் எண்ணி, - அவள்
விடுதலைக்கே சூளுரைகள் பண்ணி! (ஏறுநடை)


கூறுபட்டு நின்றவரைக் கூட்டிநட! ஊட்டிநட!
கொள்கையினைப் போற்றிநட ஊக்கி! - வெற்றிக்
கொடியினைநீ தோள்களிலே தூக்கி! (ஏறுநடை)

மாறுபட்ட ஆட்சிக்கு நீ மண்டியிட்டுச் சாய்வதோ?
மற்றவர்கள் வாழ்கையில் நீ உண்டியின்றிக் காய்வதோ?
வேறுபட்ட மக்களின்முன் கூறுபட்டுப் போயினை;
வெற்றிபெற நீ வணங்கு பண்டைத் தமிழ்த்தாயினை! (ஏறுநடை)

உன்றன்மொழி நாகரிகம் பண்பாடெல்லாம் காற்றிலே
ஊமைமொழி, கோணல்நடை ஊன்றிவிட்டாய் நாட்டிலே
வென்றவன்நீ; தோற்றுவிட்டாய் ஆரியர்பொய்ப் பாட்டிலே!
வெற்றி கொள்ள நீஎழடா செந்தமிழ்மெய்ப் பாட்டிலே (ஏறுநடை)

வந்தவர்க்கு வால்பிடித்தாய்; கால்பிடித்தாய் கையிலே!
வாய்வலிக்க வாழ்த்திவிட்டாய்; வாழ்ந்துவிட்டார் பொய்யிலே;
சொந்தமொழி சொந்தஇனம் சொந்தநிலம் விட்டனை;
சோற்றுக்குநீ மண்டியிட்டு மானம், உயிர் கெட்டனை! (ஏறுநடை)

உலகமெல்லாம் உன்தமிழர் ஓடுகின்றார் வாழவே!
உன்நிலத்தை வேறுமக்கள் ஆளுகின்றார் சூழவே!
இலகுதமிழ்த் தாயையெண்ணி ஏற்றம்மிகக் கொள்ளடா!
இளைப்பதில்லை என்றவர்க்கு வாளில்விடை சொல்லடா! (ஏறுநடை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/75&oldid=1424566" இலிருந்து மீள்விக்கப்பட்டது