பக்கம்:கனிச்சாறு 3.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


49  புயல்வேகப் புரட்சியொன்று புறப்பட்ட திங்கே!

எழுச்சியுற்றோர் சிலர்கூடிப் பலவாறாய் ஆய்ந்தே
ஏற்றதொரு கொள்கையினை வரையறுத்து விட்டோம்!
வீழ்ச்சியுற்ற தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும்!
விடுதலைக்கே படைநடத்தி விடிவுபெற வேண்டும்!
புழுச்சிதைவாய் வாழ்ந்துவரும் பாட்டாளி மக்கள்,
புலம்பெயரா துழுதுழுது சாகின்ற உழவர்,
குழுச்சேர்த்துப் போராடி வெற்றிபெற எண்ணிக்
கூட்டணியொன் றமைத்துவிட்டோம்! இளைஞர்களே வருக!

அயல்நாட்டு வல்லரசின் மூலமுத லீடும்
அகநாட்டில் சுரண்டுகின்ற தரகுமுத லியரும்
வயல்நாட்டின் உழவர்களை நிலக்கிழமை யாரும்
வயிற்றடித்துத் தாம் கொழுக்கும் தன்மையெலாம் மாற்றும்
புயல்வேகப் புரட்சியொன்று புறப்பட்ட திங்கே,
பொதுவுடைமைத் தமிழகத்தை உருவாக்கல் வேண்டி!
மயலடிமைத் தனம்வீழ்க! கோழைத்தனம் வீழ்க!
மனவுறுதி கொண்டவரே! மறவர்களே! வருக!

பதவிவளம் அடிமைநலம் துய்க்கின்ற செல்வர்,
பாட்டாளி மக்களினைச் சுரண்டுகின்ற கயவர்,
உதவி செயும் நோக்கமென ஊர்க்கொள்ளை யடிப்போர்,
உன்மத்தர், சட்டங்களை உடைத்துய்யும் திருடர்,
கதவிடுக்கில் ஒளிந்திருக்கும் அதிகாரக் கேடர்,
காமத்தைக் காசாக்கும் கலையுலகக் கீழோர்,
மதவிளக்கம் பலகூறி மக்களையிங் கேய்ப்போர்
மற்றிவரை அழித்தொழிப்போம்! வீரர்களே வருக!

-1984
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/79&oldid=1424570" இலிருந்து மீள்விக்கப்பட்டது