பக்கம்:கனிச்சாறு 3.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  51


 ஒற்றுமை தன்னிலும் உரிமையே பெரிது!

வெற்றுமை எழுத்தில் வீரார்ப்புப் பேச்சில்
கற்ற,கை வரிசை காட்டியே மக்களை
எற்றிப் பிழைக்கவும் ஏய்த்துப் பிழைக்கவும்
ஒற்றுமை என்றும் ஒருமைப்பா டென்றும்
சுற்றிச் சுற்றிப் பேசுகிறீர்கள்!
வெற்று வயிறுகள்! வெறுமை உடம்புகள்!
முற்றமும் இன்றிப் பாதைகள் ஓரம்,
குற்றுயி ராயும் குலைஉயி ராயும்
தொற்று நோயோடு துன்பப் படுவதைச்
சற்றே நின்று, சாய்க்கடைப் பகுதியில்
உற்றுப் பார்த்தே உணர்ந் திருப்பீர்களா?

ஒற்றுமை என்ன? ஒருமைப் பாடென்ன?
உதவாக் கரைகளே! ஓ! உதவாக் கரைகளே!
ஒற்றுமை தன்னிலும் உரிமையே பெரிதடா,
உதவாக் கரைகளே! ஓ! உதவாக் கரைகளே!

கோயிலைக் கட்டிக் குழவியை வைத்து,
வாயிலில் கோபுரம் வானளவு உயர்த்தி,
நோயினில் விழுந்தவர் நொடிந்திடும் ஏழைகள்
ஆயிரம் நாளும் வணங்குவீர் என்றே
வாயுரம் பேசியே வஞ்சிக்கும் நீங்கள்,
காய்களும் கனிகளும் கறிகளும் உண்டு,
நோய்களும் இன்றி நொடிகளும் இன்றிச்
சாய்ந்த மெத்தைச் சொகுசுவண் டிகளில்
ஓயாமல் நாளும் ஊர்வலம் வந்தே
காயாமல் காயும் ஏழைகள் காதிலே
மாய்மால ஒற்றுமை ஒருமைப்பா டென்றே
வாயால் கத்தியே வாழுகின் றீர்களே!

ஒற்றுமை என்ன? ஒருமைப்பா டென்ன?
உலுத்தர் இனங்களே! ஓ! உலுத்தர் இனங்களே!
ஒற்றுமை தன்னிலும் உரிமையே பெரிதடா,
உலுத்தர் இனங்களே! ஓ! உலுத்தர் இனங்களே!

-1984
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/80&oldid=1424571" இலிருந்து மீள்விக்கப்பட்டது