பக்கம்:கனிச்சாறு 3.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 55


54  உரிமை ஒடுக்கமே விடுதலை முழக்கம்!


உரிமை ஒடுக்கமே விடுதலை முழக்கமாய்
உருவாகி வருவது திண்ணம்! - இதற்கு
உரமிட்டு வளர்ப்பதே எண்ணம்! - இதைச்
சரிவர விளங்கிக் கொள்ளாத மக்களைச்
சார்பாக ஆக்குதல் வேண்டும்! - அதுதான்
சரிநிகர் உணர்வினைத் தூண்டும்!

வழிவழி யாய்வரும் மக்களை ஒடுக்கி
வாழ்வியல் உரிமையை அடக்கி - அவரை
வறுமையில் அடிமையில் முடக்கி - மதக்
குழிகளில் வீழ்த்திச் சாதியில் தாழ்த்திக்
கொன்று குவித்திடும் அரசு! - உடனே
கொட்டடா விடுதலை முரசு!

உலகெலாம் உரிமை முழக்கம் எழுந்தது!
உணர்ந்திடு! விழி! எழு! தமிழா! - உன்றன்
உயிரென்ன நீரினில் குமிழா? - உன்
ஒண்டமிழ்த் தாய்மொழி, இனம், நிலம் யாவும்
உருக்குலைந் தழிவதோ, இந்நாள்? - நீதான்
உலகை ஆண் டவனடா முன்னாள்!

சிறுசிறு நலன்கள் சில்லறை உரிமைகள்
சிதைக்குமே உன்பெரும் நோக்கம்! - அவற்றால்
சிறக்குமோ விடுதலை ஆக்கம்? - இனம்
உறுபெரும் பயன்பெற உரிமையை மீட்பாய்!
ஒன்றுதான் உனதுயிர்க் கொள்கை! - என்றும்
உறுதிதான் தமிழ்நிலம் வெல்கை!

-1985
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/84&oldid=1424576" இலிருந்து மீள்விக்கப்பட்டது