பக்கம்:கனிச்சாறு 3.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


55  இறுதி நேரம் உனக்கிது!

இறுதி நேரம் உனக்கிது, தமிழனே!
எண்ணுவாய் எண்ணுவாய் எண்ணியே எழுவாய்!
உறுதிசெய்! ஒன்று,நீ ஒழிந்திடல் வேண்டும்;
அல்லதுன் பகையை, நீ ஒழித்திடல் வேண்டும்!
சிறுதயங் கலும்,உன் நிலையினைச் சிதைக்கும்!
சீர்த்திடும் பகைஇனும் வலுப்பெற வைக்கும்!
மறுதிசை திரும்பேல்! மார்புக்கு நேரே
மாற்றான் துமுக்கியும் நீண்டது, பாரடா!

கட்சியைக் களைந்தெறி! சாதியைக் கழற்று!
கணநேரத்திலுன் மதத்தினைத் துப்பு!
முட்சிதை வுற்றே முனைவருத் துதல்போல்
முப்பது நூறாண் டொற்றுமை யின்றி
உட்சிதை வுற்ற உன் இனத்தினை ஒன்றுசேர்!
உருட்டு விழிகளை! உன்பகை தூள்தூள்!
வெட்சிப் பூவணி! வேகப் படு,நீ!
வெற்றி முரசினை அதிர முழக்கியே!

நரிமையை நாய்மையை நையப் புடைத்திடு!
நமக்குள் வேர்விடும் வஞ்சரை நசுக்கு!
அரிமாப் போத்தே! அடர்வெம் புலியே!
ஆரடா உனையெதிர்த் தாளுமை செய்பவர்?
உரிமையை மீறிய ஒருவளம் இல்லை!
உள்ளம் நாறிடும் கீழ்மைக்குத் தீவை!
எரிமேல் இருந்துன் சூளுரை முழக்கு!
எங்கள் தமிழ்நிலம் எங்களுக் கென்றே!

-1986
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/85&oldid=1424577" இலிருந்து மீள்விக்கப்பட்டது