பக்கம்:கனிச்சாறு 3.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


64 ஊரதிரும் புரட்சி ஒன்று தேவையே!

உண்ணும் உணவுக்கும்
உடுக்கும் உடைக்குமே
எண்ணி எண்ணியே
ஏங்கிய நெஞ்சொடும்

கடுத்த வயிறொடும்
காந்திய கண்ணொடும்
படுத்துக் கிடந்து
பகற்கனாக் காணும்

பாட்டாளி உலகம்
பலகோடி இருக்கையில்
ஆட்டமும் பாட்டமும்
ஆரவா ரங்களும்

கொண்ட கலைகளும்
கூத்தும் தேவையா?
மண்டும்இந் நிலைதான்
பாரத மாண்பா?

எடுத்த எடுப்பில்
உலகம் என்கிறாய்!
உடுத்த உடையிலும்
ஊர்மெச்சும் பேச்சிலும்,

மக்களை ஏய்க்கும்
மதவிழாக் களிலும்
ஒக்க பாரத
ஒற்றுமை என்கிறாய்!

கலகம் என்கிறாய்,
கருத்துகள் சொன்னால்!
உலகை ஏமாற்ற
ஒருமைப்பா டென்கிறாய்!

பாரதப் பெருமையே
பகற்கொள்ளை என்றால்,
ஊரதிரும் புரட்சி
ஒன்று தேவையே!

-1988
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/93&oldid=1424586" இலிருந்து மீள்விக்கப்பட்டது