பக்கம்:கனிச்சாறு 4.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 65


44

தோற்றம் வேறு; செயல் வேறு !


கசப்பும் இனிப்பும்
கலந்து கிடக்கும்;
கள்ளமும் உள்ளமும்
மலர்ந்து தோன்றும்;
பசப்பும் நயமும்
பார்த்துப் பழகு;
பதற்றப் படாதே!- சில
பகையும் நகைக்கும்;
நட்பும் கடுக்கும்;
பயன் மறவாதே!

உயர்வும் தாழ்வும்
உறழ்ந்து கிடக்கும்;
உண்மையும் பொய்யும்
ஒன்றாய்த் தெரியும்;
பயிரும் களையும்
பயனால் தெளிக;
பல்இளிக் காதே!- சில
பழத்தில் கசக்கும்!
காயில் இனிக்கும்;
பார்வை போதாதே!

அன்பும் வன்பும்
அளவிக் கிடக்கும்;
அறமும் மறமும்
குலவி மயக்கும்;
நன்மை தீமை
நாவில் தெரியா?
நம்பி விடாதே!- சில
நாயில் நரிகள்;
நரியில் நாய்கள்;
நன்றி மறவாதே!

-1975
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/100&oldid=1440729" இலிருந்து மீள்விக்கப்பட்டது