பக்கம்:கனிச்சாறு 4.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 67


“மடையா, உனைப்போய்க் கேட்டேனே!
மதிப்பாய் இப்பணி விட்டுவிடு.
அடையாத் துன்பம் நீயடைவாய்
அடிப்பேன் செருப்பால் இப்பொழுதே
கடையா வைத்திருக் கின்றாய், நீ
கழுதை!” என்றே பலகூறி,
நடையன் எடுத்தான் அடிப்பதற்கே!
நடுத்தெருக் கூட்டம் கூடியதே! 5

எட்டியே நான்நின் றிருந்ததனால்
என்னென் றறியக் கூட்டத்தைக்
கிட்டினேன்; உள்ளே தலைநீட்டிக்
கிடைக்கும் செய்தி கேட்டிருந்தேன்!
முட்டிய வாறாய்ச் சிற்சிலரும்
முன்னடிக் கொண்டே பற்பலரும்
எட்டியும் எக்கியும் பார்ப்பபோராய்
இருந்தார் சிலரும் பார்த்திருந்தேன்! 6

கூட்டத் திருந்தோர் இருமுகமாய்க்
குறைகள் நிறைகள் பேசிநின்றார்
வாட்டத் துடனே கிழக்கணியன்
வாய்பே சாமல் நின்றிருந்தான்!
நாட்டத் துடனே செய்தியினை
நறுக்குந் துணுக்கு மாய்ச்சிலர்பால்
கேட்டுக் கொண்டேன், தெளிவாக!
கிழவன் மேலே பிழையில்லை! 7

பத்துப் பதினொரு நாட்களின்முன்
பார்த்தது, கணியம், மிதிவண்டி!
ஒத்து வராமல் சண்டையிட்டே
ஓடிப் போனாள் அவன்மனைவி!
“எத்திசை போனாள்? வருவாளோ?
எத்தனை நாளில் வந்திடுவாள்?
ஒத்திருப் பாளா?” என்றெல்லாம்
ஒருநாள் கணியனைக் கேட்டானாம்! 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/102&oldid=1440731" இலிருந்து மீள்விக்கப்பட்டது