பக்கம்:கனிச்சாறு 4.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 71


47

உன்னை நம்பிக் கிடக்குது நாடு!


நம்பிக் கிடக்குது நாடு - தம்பி
நம்பிக் கிடக்குது நாடு - உன்னை
நம்பிக் கிடக்குது நாடு - பெரும்
நலத்தினைச் செய்திடு வாயென நாளும் (நம்பிக்)

கும்பிக் கிலாதொரு கூட்டம் - மேற்
கூரையில் லாமலே வாழ்வதும் எண்ணி
வெம்பிக் கிடந்திடும் நெஞ்சம் - இதை
வேரொடு சாய்த்திடப் போரிடு வாயென (நம்பிக்)

துப்பின்றி வாழ்ந்திடு வோர்கள் - கேட்கும்
துணிவின்றி நொந்துகண் ணீர்விடு வோர்கள்
உப்பின்றிக் கூழின்றிச் சாவார் - உனை
ஒப்படைத் தங்குப் புறப்புடுவாயென (நம்பிக்)

ஒவ்வொரு நாளும் நினைப்பாய்-நொடி
ஓய்வின்றி உடல்பொருள் ஆவியும் ஈவாய்!
கவ்விற் றடா,இருள் நாட்டை-செங்
கதிரெனத் தோன்றி ஒளிதரு வாயென (நம்பிக்)

உன்கல்வி உன்அறி வூற்று-உன்
உழைப்பும் முயற்சியும் வாழ்க்கையும் அன்னார்
புன்னிலை மாய்த்திடல் வேண்டும்-எனும்
புத்துணர் வோடுளம் ஒத்தெழு வாயென (நம்பிக்)

-1977
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/106&oldid=1440735" இலிருந்து மீள்விக்கப்பட்டது