பக்கம்:கனிச்சாறு 4.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௦

கனிச்சாறு நான்காம் தொகுதி


வெளியீட்டுரை

கனிச்சாறு (பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்) தொகுதி முதற்பதிப்பு 1979இல் வெளிவந்த பின், 1995 இல் பாவலரேறு மறைவுவரை வெளிவந்த அனைத்துப் பாடல்களும் தொகுக்கப் பெற்று முழுமைபெற்ற முதற்பதிப்பாக இப்போது வெளிவருகிறது.

முதற்பதிப்பின் முத்தொகுதிகளும் தென்மொழியில் சுவடி : 14; ஓலை : 12 வரையிலும் மற்றுத் தமிழ்ச்சிட்டில் குரல் : 9; இசை: 12 வரையிலும் வெளிவந்த பாடல்கள் அளவிலேயே அமைந்தன. அதன்பின் தொடர்ந்து வந்த இதழ்களின் பாடல்கள் அனைத்தும் துறைவாரியாகப் பிரிக்கப்பெற்று எண்தொகுதிகளாக இப்பதிப்பு நிறைவு செய்யப்பெற்றுள்ளது. மேலும், ஐயா அவர்கள் தம் இளமைக் காலத்தில் எழுதியனவும் இதுகாறும் அச்சுக்கு வராதனவுமான பாடல்கள் சில, பழைய குறிப்புச் சுவடிகளினின்றும் எடுத்துச் சேர்க்கப்பட்டுள்ளன; அன்றியும் ஐயா அவர்கள் அன்பர்கள் பலருக்குப் பல்வேறு நிகழ்வுகளையொட்டி எழுதியனுப்பிய பாடல்கள் பல, அவ் அன்பர்களிடமிருந்து பெறப்பட்டும், சில ஐயா அவர்களின் சுவடிகளிலிருந்து எடுத்தும் இணைக்கப்பட்டுள்ளன. (பழைய பாடல்களில் ஒரோவழி பெற்றிருந்த அயன்மொழிச்சொற்கள் வரிவடிவில் வேறுபடுத்திக் காட்டப் பெற்றுள்ளன.)

மொத்தத்தில், ஐயா அவர்களின் தனி இலக்கியங்களான கொய்யாக்கனி, ஐயை, பாவியக்கொத்து, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, நூறாசிரியம், உலகியல் நூறு, கழுதை அழுத கதை, அறுபருவத் திருக்கூத்து ஆகியன அல்லாத பிற பாடல்கள் அனைத்தும் தொகுக்கப்பெற்றுப் ‘பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் தனிப்பாடல்கள்_அடங்கல்’ என்னுமாறு இப்பதிப்பு முழுமையான பதிப்பாக வெளிவருகிறது. அவ்வகையில் இதுவே முதற் பதிப்பு எனலாம்.

பாடல்கள் அனைத்திற்கும் முன்னைப் பதிப்பின் போக்கிலேயே தொடர்ந்து பாடல்கள் விளக்கக் குறிப்புகள் எழுதிச் சேர்க்கப் பெற்றுள்ளன.

இயற்றப்பெற்ற அல்லது வெளிவந்த காலத்தையொட்டி ஆண்டு, மாத முறைப்படி பாடல்கள் வரிசைப்படுத்தப்பட்டிருப்பது இப்பதிப்பின் தனிச்சிறப்பாகும்.

பழைய பாடல்கள் சில எழுதப்பெற்ற காலம் தெளிவாகத் தெரியாமையால், அப்பாடற்குரிய ஆண்டையொட்டி வினாக்குறி யிடப்பட்டுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/11&oldid=1439515" இலிருந்து மீள்விக்கப்பட்டது