பக்கம்:கனிச்சாறு 4.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 77


53

பதற்றம் கொள்ளாதே!


தொலைவில் இருக்கையில்
அழகாய்த் தெரிவது
நெருங்கிப் பார்க்கையில்
நெருடாய் இருக்கும்!
மலைவும் குலைவும்
மனத்தின் இயல்பு!
மயக்கம் கொள்ளாதே!-தம்பி
மாண்பை இழவாதே!

அழகெனப் பெறுவதோ
கட்புலன் அறிவு!
அன்பெனப் பெறுவதோ
மனப்புலன் தெரிவு!
பழகப் பழகவே
பயன்தெளி வாகும்!
பார்வை போதாதே!-தம்பி
பதற்றம் கொள்ளாதே!

பளபளப் புறுவதும்
பகட்டாய்த் தெரிவதும்
பயனில் குறையலாம்;
பண்பில் தாழலாம்!
வளவளப் பேச்சில்
வல்லமை விளங்குமோ?
வம்பில் இறங்காதே! - தம்பி
வாழ்வை இழக்காதே!

-1977
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/112&oldid=1440743" இலிருந்து மீள்விக்கப்பட்டது