பக்கம்:கனிச்சாறு 4.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78 கனிச்சாறு – நான்காம் தொகுதி


54

எதிர்ப்புக்கு இளைக்காதே!


எதிர்ப்பா ளர்கள்
எங்கும் இருப்பர்;
என்றும் இருப்பர்; இளைக்காதே!-பெரும்
புதிர் அது தம்பி!
புதுமை அன்று!
பொதுமைத் தொண்டில் களைக்காதே!

எதிர்மின் ஆற்றல்,
நேர்மின் ஆற்றல்
இரண்டும் உண்டே! அறிவாய்,நீ!-ஓர்
அதிர்வால் அன்றோ
அசைவே உண்டாம்!
ஆக்கம் உண்டாம்! தெளிவாய், நீ!

ஒருவன் உன்னை
எதிர்க்கும் போதே
ஊக்கந் தோன்றும்; உரந் தோன்றும்!-நல்
பெருமிதந் தோன்றும்;
அறிவுந் தோன்றும்!
பேச்சும் செயலும் மிகத் தோன்று

எருவாய்க் கொள்வாய்,
எதிர்ப்பை எல்லாம்!
இயக்கம் யாவும் அதிர்வென்க!-உயிர்
கருவாய் உருவாய்த்
திருவாய்த் தோன்றல்
கருவணு இரண்டின் எதிர் வென்க!

உண்மையை என்றும்
பொய்ம்மை எதிர்க்கும்!
உயிர்ப்பில் ஒளிர்வது மெய்யாகும்!-மனத்
திண்மையே வாழ்க்கை!
தேற்றமே வீரம்!
தெளிவாய்! அழிவது பொய்யாகும்!

-1977
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/113&oldid=1440744" இலிருந்து மீள்விக்கப்பட்டது