பக்கம்:கனிச்சாறு 4.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 79


55

தனி நலத்தைத் தவிர்!


உள்ளத்திலே உண்மைஒளி
உதட்டினிலே கனிந்தமொழி
கள்ளமற்ற தொண்டுநலம்
- பாண்டியா - நம்
காலத்திற்குத் தேவையடா
- பாண்டியா!

அண்ணனையும் தம்பியையும்
அடிப்பறிக்கும் வேலையெல்லாம்
எண்ணுதற்கும் நெஞ்சுசுடும்
- பாண்டியா - நம்
இனத்தினையே கீழ்ப்புதைக்கும்
- பாண்டியா!

தப்பிருக்கும் தவறிருக்கும்
தாங்கிலன்றோ உறவிருக்கும்
எப்புடையும் எம்மருங்கும்
- பாண்டியா - அவை
இயற்கையடா மயலறுப்பாய்
- பாண்டியா!

உன்வயிற்றை உன்நலத்தை
ஒக்கநினைத் தே,இனத்தைப்
புன்செயலால் கூறுசெயல்
- பாண்டியா - நமைப்
புதைகுழிக்குள் தள்ளுமடா
- பாண்டியா!

சட்டிசுட்ட தெனக்குதித்து
நெருப்பினிலே சாய்ந்தகதை
எட்டியதோ கண்கவர்ச்சி
- பாண்டியா - இங்கு
இருப்பதன்மேல் அங்கிருக்கும்
- பாண்டியா!

-1977
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/114&oldid=1440745" இலிருந்து மீள்விக்கப்பட்டது