பக்கம்:கனிச்சாறு 4.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 81


உணர்வாய் நினைப்பன
உன்னை உயர்த்தும்!
மயர்வாம் நினைவுகள்
அறிவையும் மயக்கும்!
துயர்வுறும் வினைக்குத்
துணிவுகொள் ளாதே!
அயர்வின்றி இயங்கு!
ஆக்கம் துணைவரும்! 5

ஒழுக்கமே உன்றனை
உயர்த்திடும் படிநிலை
இழுக்கம் இழுக்கு!
இழிவுறும் அதனால்!
பழக்கம் கொடியது!
பண்புபொன் மகுடம்!
இழக்கும் பொழுதுகட்(கு)
ஈட்டம் நினைந்துபார்! 6

ஒவ்வொரு நொடியும்
உனக்கென வாய்த்தது!
எவ்வொரு நொடியும்
இழத்தல்செய் யாதே!
ஒவ்வொரு நொடிக்கே
ஏங்கி யிருந்ததாய்
அவ்வொரு நொடியும்
அளாவிப் பயன்பெறு! 7

நேற்றெனல் வேறு!
இன்றெனல் வேறு!
நேற்றிருந் ததுபோல்
இன்றிருந் திடாதே!
நேற்றினும் இன்றுநீ
நெடிது வளர்ந்துளாய்!
நேற்றைய வளர்ச்சியுள்
நினைவொடுக் காதே! 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/116&oldid=1440747" இலிருந்து மீள்விக்கப்பட்டது