பக்கம்:கனிச்சாறு 4.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82 கனிச்சாறு – நான்காம் தொகுதி


நேற்றைய நினைவுகள்
இன்றைய செயல்கள்!
நேற்றைய அறிவோ!
இன்றறி யாமை!
நேற்றைய அடிக்குமேல்
நெட்டடி இன்றுவை!
நேற்றுநீ காற்றெனில்
நீள்விசும் பின்றுநீ 9

உன்றன் விழிகளை
உயர்த்துக வானில்!
உன்றன் செவிகளை
உலகெலாம் பரப்புக!
குன்றுபார்! கதிர்பார்!
கோடிவிண் மீன்பார்!
நின்றுபார்! நடந்துபார்!
நீ, சிறு உலகம்! 10

சிற்றுயிர் எறும்பும்
சுற்றுதல் காண், நீ!
மற்றுயிர் எல்லாம்
இயங்குதல் மதித்துணர்!
அற்றெனில் நீ, ஏன்
அமர்ந்திங் கிருப்பது?
கற்றுவா; எண்ணிவா;
காற்றில் நனைந்துவா! 11

மலைமுக டேறு!
மடுவினில் இறங்கு!
கலைகுவி சோலையுள்
காற்றாய் நுழைந்து போ!
அலைவீட் டுள்புகு!
ஆற்றினில் நீந்து!
புலைநினை வழிந்திட
இயற்கையுள் புதை,நீ! 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/117&oldid=1440822" இலிருந்து மீள்விக்கப்பட்டது