பக்கம்:கனிச்சாறு 4.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 83


உயிரை மலர்த்து;
உணர்வை அகல்செய்!
பயிர், நீ! கதிர், நீ!
பழம்பெரு வான், நீ!
துயர்கொளும் சிறிய
துகளிலை; நீ, ஓர்
உயிரொளிப் பிழம்பு;
உலக உடம்பு! 13

சிற்றிறை வன்,நீ!
சிந்தனை வெள்ளம்!
அற்றிடாப் பிறவி;
அறிவுக் கொழுந்து!
வற்றிடா ஊற்று;
வளர்பெரும் புடவி!
இற்றிடா நெற்று;
கோடிக் குமுகம்! 14

சிறுமையை எண்ணிச்
சிறுத்துப்போ காதே!
வெறுமையை நினைந்து
வெயர்த்தழி யாதே!
குறுமை நினைவுகள்
குறுமையாம் வாழ்க்கை!
நறுமை நினைவுகள்
நல்லொளிப் பிறவி! 15

உண்மை வலியது!
உள்ளமும் வலியது!
திண்மை தருவதும்
தேர்வதும் அதுதான்!
மண்மேல் அனைத்தும்
மடிந்துமட் குவன!
என்மேல் எண்ணிய
ஒருவனாய் இரு, நீ! 16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/118&oldid=1440748" இலிருந்து மீள்விக்கப்பட்டது