பக்கம்:கனிச்சாறு 4.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84 கனிச்சாறு – நான்காம் தொகுதி


புன்மை சிறியது;
பொய்மையும் சிறியது!
புன்மேல் பனித்துளி
போலும் உடம்பதன்
மின்போல் வாழ்க்கையில்
மீந்துவ துயர்வே!
புன்மையும் புரையும்
பொக்கன; புதைவன! 17

தருக்குகொள் ளாதே!
தன்முனைப் பகற்று!
செருக்குச் சேற்றினில்
சிதைந்தவர் பலபேர்!
உருக்குலைத் திடும், அது;
உன்னையும் உம்மையும்!
திருக்குலைத் திடும், அது;
தீமையும் விளைக்கும்! 18

உலகுக் குரியனாய்
உன்னை உயர்த்திடு!
உலகுக் குரியராய்
உயர்த்து மாந்தரை!
கலகக் கொள்கையில்
கால்கோ ளாதே!
விலகப் பயில், நீ;
வீணுரை வீணரை! 19

மாந்த ஒளி, நீ!
மந்த விலங்கிலை!
ஏந்தல் எனநட!
இளைத்தும் தலைநிமிர்!
காந்தப் பார்வையால்
மக்களைக் கவர்ந்திடு!
சேந்து, அவர் நினைவை!
செம்மை நினைவு வார்! 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/119&oldid=1440749" இலிருந்து மீள்விக்கப்பட்டது