பக்கம்:கனிச்சாறு 4.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 91


60

ஏற்பும் தவிர்ப்பும்!


அடக்கமாயிரு; முடங்கி விடாதே!
ஆழமாய்நினை; அமைந்து விடாதே!
இடக்குகள் தவிர்; இடிந்து விடாதே!
எளிமையா யிரு; இழிவா யிராதே!

துருதுரு வென இரு; துடுக்கா யிராதே!
துள்ளித் திரிவாய்; துன்புசெய் யாதே!
எருதுபோலிரு; எக்களிப் புறாதே!
இனிமையாய்ப்பழகு; ஏமாறி விடாதே!

எல்லைப்படநில்; உரிமையிழ வாதே!
எதிர்நின்று பேசு; எதிரியா காதே!
சொல்லை அளந்து சொல்; சோர்ந்து பேசாதே!
சுறுசுறுப்பாயிரு; படபடப் புறாதே!

மகிழ்ச்சி யாயிரு; மனச்செருக் குறாதே!
மற்றவர் மதிப்பாய்; மனம் இழவாதே!
புகழ்ச்சி விரும்பு; புல்லியர் சொல்தவிர்!
போக்கினை உறுதிசெய்; புறம்போகாதே!

வினைசெய விரும்பு; வேக முறாதே!
வீம்பறை விலக்கு; வெறுப்புக் கொள்ளாதே!
நினைவது ஆய்ந்துதேர்; நிலைத்து விடாதே!
நேயரைப் பெருமை செய்; நினைவிழக் காதே!

ஒற்றுமை யாயிரு; உனையிழக் காதே!
உற்றவர்க் குதவு; உனைத்துற வாதே!
பெற்றவர் பேணு; பிழைசெய் யாதே!
பெருமை யாயிரு; பீற்றிக்கொ ளாதே!

அரசியல் உணர்ந்துகொள்; அறந்தவ றாதே!
ஆக்க வினைசெய்; இழந்து விடாதே!
வரிசை தெரிந்துசெய்; வழுக்கி விழாதே!
வரலாறு வாழ்க்கை; வறிதாய்ப் போகாதே!

-1980
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/126&oldid=1440757" இலிருந்து மீள்விக்கப்பட்டது