பக்கம்:கனிச்சாறு 4.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92 கனிச்சாறு – நான்காம் தொகுதி


61

ஒவ்வொரு வீட்டிலும்
ஒவ்வொரு நூலகம்


ஓய்வு வேளையில்
பிள்ளைகள் படித்திட
ஒவ்வொரு வீட்டிலும்
ஒவ்வொரு நூலகம்
உருவாய் அமைத்திடல் வேண்டும்-அதுதான்
உயர்வாம் அறிவினைத் தூண்டும்!

ஆய்வுரை நூல்கள்,
அறிவியல் நூல்கள்,
தோய்வுறு நெறிமுறை
துலக்கிடும் நூல்கள்,
தொன்மை அறம்புகல் நூல்கள்-அவைதாம்
தூய்மை வாழ்க்கையின் கால்கள்!

பாவியக் கதைகள்,
பயன்தரு உரைகள்,
ஓவியக் காட்சிகள்,
உலகறி கலைகள்,
ஒழுங்காய்ச் சேர்த்திடல் நன்மை-அவைதாம்
உள்ளொளி பெருக்கிடும்; உண்மை!

ஆவியை மலர்த்திய
அருளரும் அறிஞரும்
மேவிய வாழ்முறை
மிளிர்வர லாறு
மிகுதியும் படியுங்கள் பேணி-அவைதாம்
மேல் நமை உயர்த்திடும் ஏணி!

பச்சைப் புளுகுகள்,
பயனிலா நூல்கள்,
பாலியல் உணர்வுசெய்
பளபளப் பிதழ்கள்
நச்சென அறிவினை ஒழிக்கும்-மேலும்
நாட்குநாள் நம்மையே அழிக்கும்!

- 1980
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/127&oldid=1440758" இலிருந்து மீள்விக்கப்பட்டது