பக்கம்:கனிச்சாறு 4.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 95


64

பொய்யா வாழ்க்கை அறவாழ்க்கை !


உண்பதும் உடுப்பதும்
உறங்குவ தும்,என
ஒவ்வொரு நாளும் கழிக்கின்றார்!-அவர்
உயிரின் சிறப்பைப் பழிக்கின்றார்!-தம்பி
மண்புது வாழ்க்கை
மக்கள் தோற்றம்
மனமும் அறிவும் துலங்கிடவே!-நாம்
மறைந்ததன் பின்னும் விளங்கிடவே!

விலங்கும் பறவையும்
விழுங்கும்; தூங்கும்!
வேறென் செய்யும்? இனம்பெருக்கும்!-பின்
வீழ்ந்தே அழியும்! நிலைமறக்கும்!-தம்பி
துலங்கும் அறிவும்
தூய்மையின் உளமும்
துறந்தால் நமக்கும் உயர்வென்ன? நாம்
தோன்றியே மறையும் பொருளென்ன?

நல்லுயர் கல்வியும்
நன்னெறி வாழ்வும்
நாம்கடைப் பிடிக்கும் ஒருநோக்கும்-நம்
வாழ்வை உயர்த்தும்; புகழ்தேக்கும்!-தம்பி
புல்லியர் வாழ்க்கை
புதைந்தழிந் தொழியும்!
பொய்யா வாழ்க்கை அறவாழ்க்கை!-அது
பொதுவுணர் வால்வரும் மறவாழ்க்கை!

-1984
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/130&oldid=1440761" இலிருந்து மீள்விக்கப்பட்டது