பக்கம்:கனிச்சாறு 4.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96  கனிச்சாறு - நான்காம் தொகுதி


65

புன்மையும் நன்மையும் !


ஆங்கே ஓர் அழுகல் கண்டால்
ஆயிரம் ஈக்கள் மொய்க்கும்!
தீங்கினைப் பலரும் சூழும்
திறத்தை அக் காட்சி காட்டும்!

பூவொன்று பூத்து நின்றால்
புதுத்தேனை விரும்பும் தேனீ,
நாவூன்றிக் குடித்து விட்டு
நயம்பாடிப் பறந்து போகும்!

நல்லதைப் பற்று தற்கு
நான்கைந்து பேரே சூழ்வார்!
அல்லதைப் பற்று தற்கோ
ஆயிரம் பேர்கள் மொய்ப்பார்!

பகட்டாலும் கவர்ச்சி யாலும்
பலபேர்கள் மயங்கிப் போவார்!
புகட்டுநல் லறிவை நாடும்
புதுமையைச் சிலரே ஏற்பார்!

புல்லுக்கோ எரு, நீர் விட்டுப்
போற்றுவார் எவரும் உண்டோ?
நெல்லுக்கே எரு, நீர் வார்ப்பார்!
எல்லையும் காவல் செய்வார்!

புன்மையும் பொய்யும் நன்கு
பொலிந்தாலும் எவரும் போற்றார்!
நன்மையும் மெய்யும் கொஞ்சம்
நலிந்தாலும் போற்றிக் காப்பார்!

-1984
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/131&oldid=1440762" இலிருந்து மீள்விக்கப்பட்டது