பக்கம்:கனிச்சாறு 4.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102  கனிச்சாறு - நான்காம் தொகுதி


71

இடரும் உலகமிது!


கடைகள் பலவிருக்கும்;
கருத்தும் பலவிருக்கும்;
கையில் காசிருப்பார்
கண்களிலே

உடைகள் பலதெரியும்
உருவம் பலதெரியும்
உண்மை உணர்வதில்லை
உரைகளிலே!

நடைகள் பலவிருக்கும்
நாட்டம் சிலவிருக்கும்
நன்மை தேடுபவர்
செவிகளிலே,

குடையும் கவர்ச்சியுரை
கொள்கை விளம்பரங்கள்
கோடி கோடி வரும்
நிறங்களிலே!

உடலம் பருத்திருக்கும்!
உள்ளம் சிறுத்திருக்கும்!
உதிர்க்கும் சிரிப்பிருக்கும்
உதட்டினிலே!

மடலம் பெருத்திருக்கும்!
மடமைக் கருத்திருக்கும்!
மயக்கும் அறிவிருக்கும்,
பகட்டினிலே!

கடலும் அருகிருக்கும்
கதிரும் முளைத்திருக்கும்
கண்கள் இருண்டிருக்கும்
காட்சியிலே!

இடரும் உலகமிது!
எண்ணத் துலங்குவதும்
ஏற்றம் விளங்குவதும்
எளிதிலையே!

-1985
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/137&oldid=1440804" இலிருந்து மீள்விக்கப்பட்டது