பக்கம்:கனிச்சாறு 4.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112  கனிச்சாறு – நான்காம் தொகுதி


79

எண்ணிப் பாருங்கள் இளந்தலை முறையரே !


உண்ணும் போதிலே
உணவு விக்கியே
உயிரை இழப்பவர்
உலகினில் பலபேர்!
எண்ணி முடித்ததை
எடுத்துச் சொல்லுமுன்
இறந்த மக்களும்
எத்தனைக் கோடியோ?

உறங்கச் சென்றவர்
காலை எழுந்திலர்!
ஊர்க்குச் சென்றவர்
திரும்பி வந்திலர்!
இறங்கிக் கிணற்றிலே
வாளி எடுத்தவர்
ஏறி வருதற்குள்
மூழ்கி இறந்தனர்!

பள்ளி சென்றவன்
வீடு திரும்பிலன்!
பகலில் இருந்தவன்
இரவைப் பார்க்கிலன்!
பிள்ளை பெற்றவள்
பிணமாய் வருகிறாள்!
பேசி முடித்தவர்
மூச்சைப் பிரிகிறார்!

எத்தனை நோய்கள்?
இறப்பு நேர்ச்சிகள்!
எவர்க்கும் வாழ்க்கையில்
இறுதி உறுதியே!
செத்துத் தொலையவா
மக்களாய்த் தோன்றினோம்?
செய்ய வேண்டிய
சிறிதும் நினைக்கிலோம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/147&oldid=1440817" இலிருந்து மீள்விக்கப்பட்டது