பக்கம்:கனிச்சாறு 4.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114  கனிச்சாறு – நான்காம் தொகுதி


80

வாழ்க்கைப் புதிரை விளங்கிக்கொள்!


உலகம் எப்படி இருந்தாலும்
உன்னிலை தனிநிலை என்றறிவாய்!
இலகும் உயிர்கள் பலவற்றுள்
இங்குன் உயிரும் ஒன்றாகும்!

பழகும் உயிர்கள் பலவெனினும்
பகைக்கும் உயிர்கள் சிலவெனினும்
அழகும் அறிவும் கொண்டிடுமோர்
அன்புயிர் உனக்குத் துணையாகும்!

ஒவ்வோ ருயிர்க்கும் தனியுணர்வாம்!
ஒவ்வோ ருயிர்க்கும் தனியறிவாம்!
எவ்வோ ருயிர்,உன் உணர்(வு) அறிவுக்(கு)
ஏற்றதாம் அதுவே நட்பாகும்!

பொருந்திய உயிர்களைப் போற்றிக்கொள்!
பொருந்தா உயிர்களைத் தூற்றாதே!
வருந்துதல், மகிழ்தல் உன்விளைவே!
வாழ்க்கைப் புதிரை விளங்கிக் கொள்!

-1989
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/149&oldid=1440819" இலிருந்து மீள்விக்கப்பட்டது