பக்கம்:கனிச்சாறு 4.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  117


81

உலக விளக்கம் !

முன்னுரை.

கடுகென முளைத்துக் கல்லென வளர்ந்து
கடுமலை யெனப்பெரி தாகிப்
படுகுழி யிறக்கும் பற்பல பிழைகள்
பழிச்செயல் இவற்றினை நீக்கி
விடுகென மக்களை வேண்டியும், நெஞ்சில்
விரியுல குய்ந்திட, அன்பை
நடுகென வேண்டியும் நவின்றனன் இந்நூல்!
நாட்டினர் யாவர்க்கும் பொதுவே! 1

1.உலகு.

நீர்பொது; நிலம்பொது; நெடுவான் வெளிபொது;
ஞாயிறும் நிலவதும் பொதுவே;
ஊர்பொது; உயிர்பொது; உயிருடற் காகிடும்
உணவெனும் பல்வகை பொதுவே!
ஏர்பொது; இவற்றின் எவ்வகை விரிவும்
எல்லார்க் கும்,பொது பொதுவே!
பார்பொது; சீர்பொது; பல்வகைப் பொருள்பொது;
பகுத்தலும் வகுத்தலும் ஏனோ? 2

2. பிறப்பு.

பிறப்பால், பிறங்குடல் உறுப்பால், உணர்வால்
பெருவலி, திறனெனும் இவற்றால்
சிறப்பால் அறிவால் செயிர்ப்புயிர்ப் பிவற்றால்
செரிப்பரிப் பெனும்பிற வகையால்
இறப்பால் மக்களும் மாக்களும் புட்களும்
எனமூ வகையுயிர் உளவால்!
அறப்பால் அறியா தாயிரம் பிறப்பென
அரற்றலும் புரட்டலும் ஏனோ? 3

3. உறுப்பு.

உயிர்ப்பும் உணவும் உயிர்க்கெலாம் பொதுவே!
உறையுளும் உடையுமென் றிவையே
பயிர்ப்புள மாந்தர் பயில்தனிப் பொருளே!
பறவையும் மாக்களுந் துணையே!
பயிர்ப்பில மாக்கள் பறவைகள் இவையே
படுவிளை வுண்டிட, மாந்தர்
புயல்வயல் தம்மால் புலம்விளைத் துண்ணப்
பொதுத்தடை கூட்டிடல் மடமே! 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/152&oldid=1444176" இலிருந்து மீள்விக்கப்பட்டது