பக்கம்:கனிச்சாறு 4.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118  கனிச்சாறு - நான்காம் தொகுதி


4. உழைப்பு.

விளைந்தன உண்ணுவ புட்களும் மாக்களும்!
விளைத்துயிர் புரக்குவர் மாந்தர்.
வளைந்துடல் வாடி வெயின்மழை நுழைந்து,
வளையா மக்களுக் கீந்து
கிளைந்துயிர் தழைக்கக் கருதிடும் உழுவோர்
கேடுறில் நிலங்கே டுறுமே!
களைந்தவர் துயரைக் காடுநா டாக்கக்
கருதா திருந்திடல் கேடே! 5

5. உழவு.

எவ்வகைத் தொழிற்கும் ஏர்கருப் பொருளே!
இறங்குவான் நீர்நிலங் காற்று
செவ்வெரி ஞாயிறு சேர்ந்தள வொன்றிச்
சினைத்தலர்ந் துறுபயன் விளைக்கும்
செவ்வகை யுழவே பல்லுயிர் முகிழ்ப்பு!
சீர்பெற வைத்தலு மஃதே!
இவ்வகைத் தொழிற்கே இடுகாப் பளியா
திருந்துயிர் வருந்துதல் இழிவே! 6

6. பொருள்.

விளைபொருள் விளையா வினைப்பொரு ளெனுமிரு
வகைப்பொரு ளாகுமிப் பொருளுள்
விளைபொருள் நாட்டம் விழைந்துள நாடே
வீழ்வுயிர் புரந்திடும் நாடாம்!
விளைபொருள் வளரும்! வினைப்பொருள் தளரும்!
விளைபொரு ளாம்வே ளாண்மை!
கிளையாம் பிறவே! கவினுல காள்வார்
கேடற விளைத்தலுந் தலையே! 7

7. நாடு.

வளர்ந்தது காடு! வளர்ப்பது நாடு!
வளம்பல சேர்ப்பதும் நாடே!
கிளர்ந்தது காடு! கிளைப்பது நாடு!
கேடறக் காப்பதும் நாடே!
தளர்ந்தது காடு! தளிர்ப்பது நாடு!
தாள்வினை கொள்வதும் நாடே!
அளந்தது காடே! அலர்வது நாடே!
அறியா ரறிவறி யாரே! 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/153&oldid=1444178" இலிருந்து மீள்விக்கப்பட்டது