பக்கம்:கனிச்சாறு 4.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  119


8. அரசு.

உலகப் பொதுமை காத்தலும் காத்தே
உயிர்பிறப் பொற்றுமை உணர்ந்தே
உலகத் துறுப்பினை ஓர்ந்துழைப் பறிந்தே
உழவெனும் பெருந்தொழில் வளர்த்தே
நிலவுயிர்ப் பொருளின் தீதுநன் றறிந்தே
நிலத்தினுள் நாடெனப் பெற்றே
வலவர், கற்றவர் வாய்ந்தறி வாய்ந்து
வையகங் காத்திட லரசே! 9

9. மக்கள்.

நாட்டைக் காத்திடும் நல்லர சவையை
நன்மையும் வன்மையுங் கருதிக்
கூட்டிட வல்லார் மக்களுள் கற்றார்!
கூடார் ஒதுங்கிடல் நன்றே!
ஈட்டமும் நாட்டமும் யாவர்க்கும் பொதுவே!
இல்லறங் காப்பவர் பெண்டிர்!
காட்டிடை விலங்காய் ஆண்பெண் உழைத்தல்
கருக்குலம் அழிவதன் வழியே! 10

10. ஆடவர், பெண்டிர்.

உடலால் உளத்தால் உரன்பெற் றிருப்போர்
ஒவ்வாகை முயல்பவர் ஆண்கள்.
திடமொடு நிற்பார்; திறன்வரை செய்து
தீமைகள் விலக்கிநன் றூக்கிக்
கடமையும் ஒழுங்கும் காப்பவர் பெண்டிர்!
காப்பவை போற்றலும் அவரே!
நடுவிதை ஆண்கள்! நன்னிலம் பெண்டிர்!
நானிலங் காக்கவல் லாரே! 11

11. தாய்மை.

ஓருயிர் இரண்டாய் உயர்தலே தாய்மை!
உயிர்தரும் உயிரே தாய்மை!
ஆருயிர் இணைந்தே அனைத்துடல் உவந்தே
ஆடவர்ப் பேணலுந் தாய்மை!
சீருயிர் அன்பின் சிறப்பிடந் தாய்மை!
சினத்தினைத் தாங்கிடந்தாய்மை!
பேருயர் ஆடவர்ப் பிணிக்குமோ ரன்புப்
பேற்றினைத் தாய்மைமென் போமே! 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/154&oldid=1444180" இலிருந்து மீள்விக்கப்பட்டது